;
Athirady Tamil News

புண்களை ஆற்றும் சீமை அகத்தி!! (மருத்துவம்)

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஈரலுக்கு பலம் கொடுக்க கூடியதும், அக்கி புண்களை குணப்படுத்தவல்லதும், தோல்நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான சீமை அகத்தியின் நன்மைகள் குறித்து காணலாம். சாலையோரங்களில் காணக்கூடிய செடி வண்டுகொல்லி. இதற்கு சீமை அகத்தி என்ற பெயரும் உண்டு. அகத்தியை போன்று பெரிய இலைகளை கொண்டது. காய்கள் பிரண்டையை போன்று இருக்கும். சீமை அகத்தி தோல்நோய்களை போக்கும் தன்மை உடையது. மேல், உள் மருந்தாகி பயன் தருகிறது. வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். காய்ச்சலை தணிக்க கூடியதாக விளங்குகிறது. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. வீக்கத்தை வற்ற செய்கிறது.

சீமை அகத்தியின் பூக்களை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீமை அகத்தி பூக்கள், பனங்கற்கண்டு. செய்முறை: சீமை அகத்தி பூக்களை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சிறுநீரை பெருக்குவதாக விளங்கு கிறது. வலியை குறைத்து வீக்கத்தை கரைக்க கூடியதாகிறது. ஈரல் நோய்களை போக்குகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றுகளால் ஏற்படும் எரிச்சல், வலி, வீக்கம், சிறுநீர் தட்டைபடுதல், வெள்ளைபோக்கு போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது.

சீமை அகத்தி இலையை பயன்படுத்தி அக்கி புண்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: காவிக்கல் சூரணம். சீமை அகத்தி.

செய்முறை: காவிக்கல் சூரணம் சிறிது எடுக்கவும். இதனுடன் சீமை அகத்தி இலை சாறு சேர்த்து நன்றாக கலந்து மேல்பூச்சாக பயன்படுத்தும் போது அக்கி புண்கள் சரியாகும். சீல்பிடித்த கொப்புளங்கள் மீது பூசும்போது அவை குணமாகும். அக்கி ஏற்படும்போது நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். எரிச்சல், வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு சீமை அகத்தி மருந்தாகிறது. சீமை அகத்தி இலையை பயன்படுத்தி சேற்றுப்புண், படர்தாமரை, நகச்சொத்தைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீமை அகத்தி இலை, தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் விடவும்.

இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, சீமை அகத்தி இலைசாறு சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுத்து மேல்பூச்சாக பயன்படுத்தலாம். இந்த தைலம் தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. விரல் இடுக்கில் ஏற்படும் தோல்நோய், ஈரத்தில் அதிக நேரம் நிற்பதால் சேற்றுப்புண், நகச்சொத்தை ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. வாந்தி, குமட்டலை நிறுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வேப்பிலை ஈர்க்கு, கறிவேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு தலா 5 எடுத்து நீரிட்டு காய்ச்சி தேனீராக குடித்துவர வெகு விரைவில் வாந்தி, குமட்டல் சரியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*