;
Athirady Tamil News

அடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன் விடுத்துள்ள வேண்டுகோள்!!

0

தமிழ்மக்களின் நில உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் தான் எங்களுடைய அடுத்த சந்ததி இந்த மண்ணில் நிம்மதியாக வாழ முடியும். நாங்கள் உள்ளுராட்சி மன்றங்களில் எத்தனையோ விடயங்களுக்கு எதிராகப் பிரேரணைகள் கொண்டு வந்து நிறைவேற்றுகிறோம். இந்நிலையில் எங்களுடைய அடுத்த தலைமுறைக்குச் சவாலாகவுள்ள வட- கிழக்கில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களுக்கெதிராக அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் தவிசாளர், உறுப்பினர்கள் இணைந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் தொகுதி அமைப்பாளருமான கு. மதுசுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(25) பிற்பகல் நல்லூர் பிரதேச சபையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் தற்போது எங்கள் குரல் வலையை நசுக்கும் வகையில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், வெடுக்குநாறி ஆகிய பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவள அமைப்புக்கள் மூலமாக எங்கள் தமிழர்களின் பூர்வீக, பாரம்பரிய நிலங்களைத் தந்திரோபாயமாக அபகரிக்கும் செயற்பாடு தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் உத்தியோகபூர்வமாக அல்லது ஆவணப்படுத்தக் கூடிய வகையில் எந்தவிதமான சட்டபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பாராளுமன்றத்துக்கு அடுத்தபடியாக மாகாண சபைகள் காணப்படுகின்றன. மாகாண சபைகள் கடந்த இரண்டு வருடங்களாக கூட்டப்படாத நிலையில் உள்ளுராட்சி என்கின்ற உள்ளூர் அரசாங்கம் தற்போது தொழிற்படு நிலையில் உள்ளது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக மேற்கண்ட காணி அபகரிப்புக்களுக்கு எதிராக எங்கள் எதிர்ப்புக்களைப் பதிவு செய்ய வேண்டிய காலகட்டத்திலிருக்கின்றோம்.

தமிழர்கள் பாரம்பரியமாகத் தொன்று தொட்டு வாழ்ந்து வந்தமைக்கு வடக்கு- கிழக்கில் பல்வேறு அடையாளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெடுக்கு நாறி மலையில் இன்றும் சிவன் ஆலயமிருக்கிறது. அங்கு பூசை வழிபாடுகள், பொங்கல்கள் இடம்பெறுகின்றன. எனினும், இவ்வாறான நிகழ்வுகளைக் குழப்பும் வகையிலான செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாக அறிகிறோம்.

வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் முல்லைத்தீவுப் பிராந்தியத்தில் எங்கள் குரல் வலையை நசுக்கும் வகையில் வெவ்வேறு திணைக்களங்கள் மூலமாகத் தந்திரோபாயமாக கையகப்படுத்தப்படுகின்ற, கபளீகரம் செய்யப்படுகின்ற செயற்பாடுகள் அரங்கேறுவதை இனியும் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இவ்வாறான அபகரிப்புக்களுக்கெதிராக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கின்ற சமாந்தரமாக வடக்கு- கிழக்கில் இயங்கி வரும் உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக எங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டிய காலகட்டத்திலிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*