வவுனியாவில் கழிவு நீரால் மக்கள் அச்சம் – சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!

தனிமைப்படுத்தல் மையமாக செயற்பட்டுவரும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவு நீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை உறுப்பினர் த.சுஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியானது கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக செயற்பட்டுவருகின்றது. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் கல்வியற் கல்லூரியின் பின்பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீநகர் கிராமமூடாக வெளியேறி வவுனியா குளத்தில் கலக்கின்றது. இதனால் குறித்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கழிவு நீரானது சீரான முறையில் வெளியேறாமல் வீதியின் கரையில் தேங்கி நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே சுகாதார அதிகாரிகள் இந்தவிடயத்தில் கவனம் எடுத்து கழிவு நீரை கிராமமூடாக வெளியேற்றுவதில் பாதுகாப்பான முறையில் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகரிற்கும் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”