90 வருடத்தில் இல்லாத படுதோல்வி.. ஸ்பெயினிடம் அவமானப்பட்ட ஜெர்மனி.. எல்லாம் அந்த ஒருவரால் வந்த வினை! (படங்கள்)
ஜெர்மனி கால்பந்து அணி ஸ்பெயின் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை அடைந்து அவமானப்பட்டது. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது.
சாம்பியன்
ஜெர்மனி அணி 2014 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அணி. அப்போது அணியில் சிறந்த அனுபவ வீரர்கள் இருந்தனர். 2018 உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் நேஷன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து தோல்வி அடைந்தது.
பயிற்சியாளர்
அப்போது ஜெர்மனி அணியின் நீண்ட கால பயிற்சியாளர் ஜோவாச்சிம் லியூ மேட்ச் வின்னர்களான அனுபவ வீரர்கள் தாமஸ் முல்லர், ஜெரோம் போட்டங், மாட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரை அணியில் இருந்து நீக்கினார் அவர்களுக்கு பதில் இளம் வீரர்களை அணியில் ஆட வைத்தார்.
படுதோல்வி
ஆனால், அவரது திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை வேலை செய்யவில்லை. 2020 நேஷன்ஸ் லீக் தொடரில் ஸ்பெயின் அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 6 – 0 என்ற கோல்கணக்கில் படுதோல்வி அடைந்தது. 90 ஆண்டுகளில் இதுவே ஜெர்மனியின் மோசமான தோல்வி.
புறந்தள்ளிய பயிற்சியாளர்
இந்த ஆண்டும் ஸ்பெயின் அணியிடம் பெற்ற தோல்வியுடன் குரூப் சுற்றில் இருந்து ஜெர்மனி வெளியேறி உள்ளது. 14 ஆண்டுகளாக அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஜோவாச்சிம் லியூ இந்த தோல்வியை சாதாரண ஒன்றாக புறந்தள்ளி உள்ளார்.
அதிருப்தியில் உள்ளனர்
ஆனால், ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். சிறந்த வீரர்களான தாமஸ் முல்லர், ஜெரோம் போட்டங், மாட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரை மீண்டும் ஜெர்மனி அணியில் சேர்க்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.