வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதி ஓதுக்கப்படவில்லை: சிவசக்தி ஆனந்தன்!!

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதி ஓதுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டனியின் பொதுச் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19.11) இடம்பெற்ற ஊடக சந்திப் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோழர் பத்மநாபா அவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை ஸ்தாபித்து ஆயிரக்கணக்கான தோழர்களை இந்தக் கட்சியுடன் இணைந்து கொண்டார். இலங்கையில் சமதர்ம சோசலிச ஆட்சி ஒன்றை நிறுவதற்காக பல முயற்சிகளை எடுத்திருந்தார். குறிப்பாக இடதுசாரி, முற்போக்கு சக்திகள் மற்றும் போராட்ட அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பை பேணியிருந்தார்.
இந்தியாவினுடைய ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழருடைய பிரச்சனைக்கு நிரத்நதமான அரசியல் தீர்வை காண முடியாது என உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையில் தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ் ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வாக இல்லா விட்டாலும், ஒரு ஆரம்ப புள்ளியாக வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசை ஏற்றுக் கொண்டது.
எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றவே அதனை ஏற்றுக் கொண்டார். இந்திய ஒப்பந்தம் கைச்சாதிட்டு 33 வருடங்கள் கடந்து விட்டது. தற்போதைய கோட்டாபாய அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அச் சர்வதேச ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்படுகின்றது. இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும். தற்போது சிங்கள பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பன்மையுடன் உள்ள இந்த அரசாங்கம் சீனா, அமெரிக்கா, இந்தியா அரசாங்கத்தின் பூகோள அரசியலுக்குள் சிக்கியுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு காத்திரமான ஒரு நிலைப்பட்டை எடுக்க வேண்டும்.
அதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய தமிழ் தேசியக கட்சிகள் மத்தியில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் பலமான ஐக்கிய முன்னனியை கட்டியெழுப்பவதன் மூலம் இந்தியாவுடனும், சர்வதேச நாடுகளுடனும் தமிழ் மக்களுக்கான பலமான இராஜதந்திர கட்டமைப்பை கட்டியெழுப்ப முடியும்.
யுத்தத்திற்கு பின் கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமும் தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமும் வடக்கு -கிழக்கு பகுதியில் யுத்தத்தால் அழிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை. மாறாக யுத்த காலத்தைப் போன்று இரட்டிப்பான நிதி பாதுகாப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிப்டைந்த மக்களின் சொத்தழிவு, உயிரிழப்பு என்பவற்றுக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கபடவில்லை என்பது தான் எனது கருத்து எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”