நினைவேந்தல் தடையை நீக்கக் கோரும் விண்ணப்பம் மன்னார் நீதிமன்றால் நிராகரிப்பு!!

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்து மன்னார் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பு என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நன்கு அறிந்திருந்தும் அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோருகிறார். எனினும் தடை நீடிக்கப்படுகிறது” என்று மன்னார் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா கட்டளை வழங்கினார்.
நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரரை நினைவுகூர்ந்து எந்த நிகழ்வையும் நடத்துவதற்கு தடை கோரி இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழும் கோவிட் -19 தொற்று நோய்த் தடுப்பு தனிமைப்படுத்தல் கட்டளையின் கீழும் பொலிஸாரால் மன்னார் நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை விண்ணப்பம் செய்யப்பட்டது.
அந்த விண்ணப்பத்துக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்தது.
அந்த விண்ணப்பத்தை மீள அழைக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நகர்த்தல் பத்திரம் அணைத்துக் கோரியிருந்தார்.
அதனடிப்படையில் வழக்கு இன்று மன்னார் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டது.
போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அவர்களது உறவினர்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பொலிஸாரின் விண்ணப்பத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.
இந்த நிலையிலேயே அவரது விண்ணப்பத்தை நிராகரித்த மன்று தடை உத்தரவை நீடித்துக் கட்டளை வழங்கியது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”