வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் – ஆ. கேதீஸ்வரன்!!

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(26) மேற்கொள்ளப்பட்ட பி.சி்ஆர் பரிசோதனைகளில் 23 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 352 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதில் வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற 3 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றும் இன்றும் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் கிளிநொச்சியில் தொற்று இனங்காணப்பட்ட முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் காய்ச்சலிற்காக அனுமதிக்கப்படும் போது போதிய பாதுகாப்பு நடவடிக்கையுடனேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரோடு நேரடித் தொடர்பில் இருந்த மூன்று மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தலிலும் மேலும் 7 மருத்துவ பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலிற்கும் உட்படுத்தப்படுகிறார்கள். அவரோடு நேரடி தொடர்புடைய உறவினர்களும் நோயாளர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் என அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”