;
Athirady Tamil News

இடரில் மக்களின் முறைப்பாடுகளுக்கு வினைத்திறனாகச் செயற்பட்டுள்ளோம் – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்!! (படங்கள்)

0

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்; நிலைமைகளை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை விரைவாக ஈடுபட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எம்மிடம் கிடைக்கப்பெற்ற மற்றும் அவதானிக்கப்பட்ட முறைப்பாடுகள் விடயத்தில் எமது சபை கிடைக்கின்ற வளங்களைக்கொண்டு செயற்றிறனாகப் பணியாற்றியுள்ளது.

எமது பிரதேசத்தில் கடல் நீர்மட்ட உயர்வினால் தாழ்நிலமாகவுள்ள பல கிராமங்களின் பெரும்பகுதிகள் வெள்ளம் வெளியேற முடியாது மூழ்கியுள்ளன. கல்வியங்காடு, இருபாலை, சிறுப்பிட்டி, புத்தூர் கிழக்கு, வாதரவத்தை, ஆவரங்கால் அச்சுவேலி, ஊரெழு கிராமங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பருத்துத்துறை வீதியின் ஒரு புறம் தாழ்நிலங்களை உடையாதாகவுள்ளது. இப் பகுதிக்கு வடிந்து வருகின்ற நீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் செம்மணி மற்றும் தொண்டமானாறு கடல் நீரேரி அணைக்கதவுகள் திறந்து விடப்படுவது வழமை. எனினும் இம் முறை கடல் மட்டம் அதிகரித்துள்ளமையினால் நீர்பாசனப் பொறியியலாளர்களால் கதவுகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. தரைப்பகுதிக்கு கடல் உட்புகும் அபாயம் நிலவியது. இந் நிலையில் வழமையான வெள்ள அனர்த்தத்திலும் பார்க்க இம்முறை மக்கள் அதிகளது பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். நாமும் வெள்ளநீரை வெளியேற்றுவதில் சவால்களை எதிர்கொள்கின்றோம்.

மேலும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இருந்து வெள்ளத்தினை வெளியேற்றுவதில் யுத்த காலத்தில் மக்கள் அமைத்த சட்டவிரோத கட்டிடங்களாலும் பிரதேசத்தில் போதிய வடிகாலமைப்பு இன்மையினாலும் அதிக கஸ்டத்தினை எதிர்கொள்ள நேர்ந்தது. பேரிடர் நிலைகாரணமாக நாம் துரிதமாகச் செயற்பட்டு வேறு திணைக்களங்களுக்குச் சொந்தமான உரித்துடைமை உடைய பொறுப்புக்களையும் எமது சபை சீர்செய்துள்ளது.

நானும் பணியாளர்களும் பிரதேச சபையின் ஏனைய கடமைகளை முழுமையாக புறமொதுக்கிவைத்து கனரக ஜே.சி.பி போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தி இன்றைய தினம் வெள்ள அனர்த்த தணிப்பு முயற்சிகளையே மேற்கொண்டோம். நாளையும் பல பகுதிகளின் நிலைமைகள் சீர்செய்யப்படவேண்டியுள்ளன.

வீடுகளில் சமைத்து உண்ண முடியாத மக்களுக்கு பிரதேச செயலகமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சமைத்த உணவை வழங்குகின்றன. அதற்குத் தேவையான குடிநீர் வசதிகளையும் எமது சபை ஏ;ற்படுத்தி வருகின்றது. இதேவேளை முறிவடைந்த மரங்களையும் அகற்றியுள்ளோம். வெள்ள நீர் பல இடங்களையும் பாதித்துள்ள நிலையில் கொரோனா பாதுகாப்பிற்காக வெளியிடங்களுக்கு செல்லாது வீடுகளுக்குள்ளேயே தங்கியுள்ளனர். அவர்களுக்கான தேவைகள் நிறைவு செய்யப்படவேண்டியுள்ளது. எதிர்வரும் நாட்கள் வெள்ளம் தேங்கியுள்ள எமது பகுதிகளைப் பொறுத்தளவில் சுகாதார நெருக்கடிகள் மக்கதாக அமையவும் சந்தர்ப்பமுள்ளன. எனவே மக்களும் அதிகபொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டியுள்ளது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + three =

*