;
Athirady Tamil News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

0

புரெவி சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப் படுகின்றது.

அத்துடன் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புரெவி சூறாவளி தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 707 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 34 இடைத் தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்து 167 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 927 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் 42 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 963 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப் பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புரெவி சூறாவளி காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

44 ஆயிரத்து 848 பேர் இந்தச் சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 50 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*