;
Athirady Tamil News

கடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்- மாவட்டச் செயலர் கே.மகேசன்!!

0

புரவி புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்ட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்”

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்ட புரவிப் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட நெடுந்தீவுப் பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பியபோது அவர் இதனை ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கடந்த மூன்று நாள்களில் ஏற்பட்ட புரவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தீவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாய்க் காட்சியளிக்கின்றன. சில இடங்களில் 3 அடிக்கு மேல் வெள்ளம் நிறைந்துள்ளது.

சில கிராம அலுவலகர் பிரிவுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. மின்சாரம் நேற்று வரை முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தினுள் நீர் புகுந்துள்ளமையால் அதனை உடனடியாக இயங்க வைக்க முடியாத நிலமை தோன்றியுள்ளது. அது சம்மந்தமாக இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். விரைவாக மின் கிடைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடலை நம்பி வாழும் 40 க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. வலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை விரைவுபடுத்துமாறு பணித்துள்ளேன்.

கரையோரப் பிரதேசங்கள் கடுமையான கடலரிப்புக்குள்ளாகியுள்ளன. கரையோரத்தில் அமைந்துள்ள இரண்டு குடியிருப்பு வளவுகள் கடலரிப்பினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை நேரில் அவதானித்துள்ளேன்.

பாதிக்கப்பட்டுள்ள சுமார் 760 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார். அதனைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்.

வெள்ளம் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மழையுடனான காலநிலை தொடருமானால் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இன்று அல்லது நாளை கடல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்தனர்.

எமது பணியாளர்கள் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறப்பாகச் செயற்படுகின்றனர். அவர்களுடன் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மக்களின் தேவைகள் தொடர்பாக துரிதமாகச் செயற்படுகின்றனர்.

நெடுந்தீவின் கரையோரப் பாதுகாப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வுள்ளேன். இறங்கு துறை முற்றாகச் சேதமடைந்துள்ளதால் அதனைப் சீரமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 5 =

*