கோலி கூடாரத்தில் இருந்து.. ரோஹித் கூடாரத்துக்கு தாவிய வீரர்.. வளைத்த மும்பை இந்தியன்ஸ்.. பரபர தகவல்! (படங்கள்)
சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பதவி கிடைத்துள்ளது. பார்த்திவ் பட்டேல் விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முக்கிய வீரராக இருந்தார். அவர் தற்போது அங்கே இருந்து ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்த்திவ் பட்டேல்
பார்த்திவ் பட்டேல் இந்திய அணியில் 17 வயதில் அறிமுகம் ஆனார். அவரால் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ஆக மாற முடியவில்லை. அவரது இடத்தை தோனி கெட்டியாக பிடித்துக் கொண்டு அணியின் கேப்டனாக உயர்ந்தார்.
உள்ளூர் கிரிக்கெட்
ஆனாலும், பார்த்திவ் பட்டேல் உள்ளூர் கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வந்தார். குஜராத் அணியின் கேப்டனாகவும் உயர்ந்த அவர் அந்த அணியை பல மடங்கு முன்னேற்றிக் காட்டினார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகவே ஆடி வந்தார்.
பெங்களூர்
முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் துவக்க வீரராக ஆடி வந்தார். அணியின் தலைமை குழுவிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டு இருந்தது. முக்கிய அணி விவாதங்களில் அவரும் கலந்து கொண்டார்.
வாய்ப்பு இல்லை
ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் எல்லாமே மாறியது. அவருக்கு 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார். அப்போதே லேசாக கிசுகிசுக்கள் எழுந்தன.
புறக்கணிப்பு
பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச், ஜோஷ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் என மூன்று துவக்க வீரர்களை பயன்படுத்தினார் கேப்டன் விராட் கோலி. பிளே-ஆஃப் சுற்றில் கூட தானே துவக்க வீரராக இறங்கினாரே ஒழிய கடைசி வரை பார்த்திவ் பட்டேலுக்கு வாய்ப்பு தரவில்லை.
விமர்சனம்
பார்த்திவ் பட்டேல் பெங்களூர் அணி வீரர் என்றாலும் 2020 ஐபிஎல் தொடரின் முடிவில் விராட் கோலி கேப்டன்சியை விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரோஹித் அணியில்..
பார்த்திவ் பட்டேல் தனக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால் இப்படி பேசுகிறார் என்றே பலரும் எண்ணினர். தற்போது அதையும் தாண்டி அவர் ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியில் பதவியை ஏற்றுள்ளார். அதுவும் தான் ஓய்வு அறிவித்த மறுநாளே!!
இளம் வீரர்கள் தேர்வு
முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான பார்த்திவ் பட்டேல் அந்த அணியில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் முக்கியமான டேலன்ட் ஸ்கவுட் பதவியை பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஐபிஎல் தொடரில் உள்ளூர் வீரர்களை நட்சத்திர வீரர்களாக மாற்றி வரும் ஒரே அணி.
நட்சத்திர வீரர்கள்
பும்ரா, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சாஹர் என பல உள்ளூர் வீரர்களை பெரிய நட்சத்திர வீரர்களாக மாற்றி உள்ளது அந்த அணி. முன்பு ஜான் ரைட் அந்த அணியில் இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு இருந்தார்.
அனுபவம்
அவர்தான் பும்ரா, பாண்டியா சகோதரர்களை அந்த அணிக்கு வரவழைத்தார். அந்த இடத்துக்கு தான் பார்த்திவ் பட்டேல் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் கொண்ட பார்த்திவ் பட்டேல் மும்பை இந்தியன்ஸ் தேவையை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளவர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளது மும்பை அணி.
பின்னணி என்ன?
அவருக்கு இந்த பதவி அளிக்கப்பட்டதன் பின்னணியில் விராட் கோலி – ரோஹித் சர்மா விரிசல் இருக்கலாம் என ஒரு தகவல் வலம் வருகிறது. பார்த்திவ் பட்டேல் இந்த பதவியை பெறவே ஓய்வை அறிவித்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.