கொரோனாவிற்கான அரசாங்கத்தின் தீர்வு என்ன ஆயுர்வேத மருந்தா அல்லது வெளிநாட்டு மருந்தா? எதிர்கட்சி கேள்வி!!

கொரோனா வைரசிற்கான அரசாங்கத்தின் தீர்வு ஆயுர்வேத மருந்தா அல்லது ஆங்கில மருந்தா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
அரசாங்கம் உள்ளுர் மருந்துகளை பயன்படுத்தப்போகின்றதா அல்லது வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்யப்போகின்றதா என்பதை தெளிவாக தெரிவிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவேகமாக பரவி வரும் 30.000 பேரினை பாதித்து 160 பேரை பலியெடுத்துள்ள கொரோனாவிற்கான அரசாங்கத்தின் தீர்வு என்னவென்பது அரசாங்கத்தின் பல்வேறு உறுப்பினர்கள் வெளியிடும் அறிக்கைகள் மூலம் தெளிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தாங்கள் ஆயுர்வேத மருந்தினை பயன்படுத்தவேண்டுமா அல்லது வெளிநாட்டிலிருந்து மருந்து வருவதற்காக காத்திருக்கவேண்டுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மருந்தினை சோதனை செய்வதற்கும் அல்லது இலங்கைக்கு பொருத்தமான மருந்தினை கண்டுபிடிப்பதற்கும் அரசாங்கத்திற்கு சகலவசதிகளும் அதிகாரமும் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.