நெடுந்தீவில் சூழகம் அமைப்பினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு..

யாழ் குடாநாட்டில் புரவி புயல், வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமான நெடுந்தீவில் சூழகம் அமைப்பினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு
தென்மராட்சி சேவை மன்றத்தின் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக நெடுந்தீவில் வெள்ள அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 240 குடும்பங்களுக்கு 24 – 12 – 2020 அன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் சுகாதார ரீதியான பொருட்களான நுளம்பு வலை, பாய் , தலகணி, போர்வைகள், குளோரின், முககவசம், பனடோல், சித்தாலேப தைலம் சவர்க்காரம் மற்றும் அவல் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.
நெடுந்தீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் 60 குடும்பங்களுக்கும், நெடுந்தீவு மகா வித்தியாலய சுற்றாடலில் அமைந்துள்ள 100 குடும்பத்தினருக்கும், நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணியம் வித்தியாலயத்தினை அண்டிய பகுதியில் 80 குடும்பங்களுக்கும் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கனடாவில் வசிக்கின்ற நெடுந்தீவின் மைந்தர்களான திரு.கண்ணன், திருமதி.ஆனந்தி, திரு.ஜனார்த்தனன் மற்றும் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி.பத்மாஜனதேவி தர்மராஜா ஆகியோரின் நிதியுதவி ஊடாக இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான கருணாகரன் குணாளன், மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி), நெடுந்தீவு மது, ருத்ரன் மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி பரமேஸ்வரி, திருமதி சிந்தைகுலநாயகி உட்பட பல சமூக செயற்பாட்டாளர்களும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனர்.