வவுனியாவில் தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளும் பொலிசார்!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வர்த்தகர்களை தகாத வார்த்தை பிரயோகத்தால் பொலிசார் திட்டிய சம்பவம் ஒன்று இன்று (13) பதிவாகியுள்ளது.
வவுனியா திருநாவற்குளத்தில் அத்தியவசிய கடைகளான, தண்ணீர் கடை மற்றும் பலசரக்கு கடை பேன்றவற்றை திறந்த வர்த்தகர்களை அங்கு ரோந்து வந்த பொலிசார் தகாத வார்த்தை பிரயோகத்தால் திட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள், வவுனியாவில் நேற்றைய தினம் (12) மக்களுக்கான எந்தவிதமான முன்னறிவித்தலும் கொடுக்காமல் ‘லொக்டவுண்’ என்ற அறிவிப்புடன் வவுனியா நகரம் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது பணத்தை பெற்றுக்கொள்வதற்கான எந்த அவகாசங்களும் வழங்கப்படாததுடன் வங்கிகளும் காலை 10.00 மணியுடன் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது.
இதன் காரணமாகவும் வவுனியா நகரம் ஏறகனவே முடக்கப்பட்டதினாலும் பொதுமக்கள் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
அத்துடன் வவுனியா அரசாங்க அதிபர் எடுக்கப்பட்ட 2000 பி.சி.ஆர் முடிவுகள் வரும்வரையில் லொக்டவுண் இல்லை என்றும், சுகாதாரப் பிரிவினரோ உடனடியாக வவுனியாவை லொக்டவுண் செய்ய வேண்டும் என்ற இழுபறி நிலையில் வவுனியா மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களான உணவுப் பொருட்களையும், தண்ணிரையும் பெற்றுக் கொள்ளுமுகமாக உள்ளுர் கடைகளை நாடி செல்லும் நிலையில் ரோந்து பணியிலிருக்கும் பொலிசார் வர்த்தகர்களை தகாத வார்த்தை பிரயோகம் மூலம் பேசி கடைகளை மூடுமாறு எச்சரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் மனிதாபிமான அடிப்படையில் மக்களின் பிரச்சனைகளையும் சுகாதாரப்பிரிவினர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”