;
Athirady Tamil News

வவுனியா கள்ளிக்குளத்தில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி! அரச அதிகாரிகள் நடவடிக்கை இல்லை!!! (படங்கள்)

0

வவுனியா சிவபுரம் கள்ளிக்குளத்தில் பத்துவீட்டு திட்டம் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளிக்குளம் பத்துவீட்டுத்திட்டம் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அம்மக்கள் வாழும் வசிப்பிடங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியை மழை வெள்ளம் ஊடறுத்து பாய்ந்துவரும் நிலையில் அப்பகுதிக்கு செல்லும் வீதிகள் மிகவும் மோசமடைந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள், மழை வெள்ளம் எமது வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், எமது குழந்தைகள் முதியவர்களுடன் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வசித்து வருகின்றோம். வீதிகள் சேதமடைந்திருப்பதால் வெளித்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. எமது நிலை குறித்து கள்ளிக்குளம் கிராமத்தின் கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை, தொடர்ந்து கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு எமது நிலை குறித்து அறிவித்திருந்தோம் யாரும் எங்கள் நிலை குறித்து நடைவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என கவலை வெளியிட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரம் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரம் முடக்கம் ஒருபக்கம் மழை வெள்ளம் ஒருபக்கம் என எமக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எமது நிலையை உணர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + twelve =

*