உடனடி கடன் செயலி விவகாரம் : சீனர் உள்பட மேலும் 2 பேர் கைது..!1

இணையவழி செயலிகள் (ஆப்கள்) மூலம் உடனடி கடன் வழங்கியது, கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை தொந்தரவுபடுத்தியது தொடர்பாக சீனாவைச் சேர்ந்த 3 பேர் உள்பட ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சீன நாட்டவர் ஒருவர் உள்பட மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் அலுவலக தனிப்படையினர், மராட்டிய மாநிலம் தானேயில் அவர்களை கைது செய்தனர்.
செயலிகள் மூலம் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை திரும்பப் பெறும் பணியை மேற்கொண்ட ஒரு புனே கால் சென்டரை ராச்சகொண்டா போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, மேற்கண்ட கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கிறது.
இத்துடன், உடனடி கடன் செயலிகள் தொடர்பாக இதுவரை 4 சீனர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.