;
Athirady Tamil News

ஐக்கிய நாடுகள் சபைக்கு எமது பிரச்சினையை கொண்டு செல்ல தேவையில்லை-பொஹவந்தலாவ இராகுல தேரர்!! (வீடியோ)

0

ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம். மனிதன் இயற்கைக்கு செய்த தவறினால் இயற்கை மனிதனுக்கு கொடுத்த முதலாவது தண்டனை சுனாமி இரண்டாவது தண்டனை கொரோனா விஷ கிருமி ஆகும். கொடிய கொரோனா இந்த உலகத்தை விட்டு நீங்குவதற்கு எல்லா பிரார்த்தனைகளையும் செய்வோம் என சர்வமத நல்லிணக்கத்திற்கான பிரதிநிதி மற்றும் தமிழ்மொழி அடங்கலாக பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படும் பொஹவந்தலாவ இராகுல தேரர் தெரிவித்தார்.

ஐக்கியம், சமாதானம்,சாந்தி ஆகியவற்றை இந்நாட்டு மக்களிடையே நிலைநாட்டுகின்ற வகையில் வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாட்டின் அனைத்து இடங்களுக்கும் தர்ம விஜயம் மேற்கொள்கின்ற இவர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்த பின்னர் இன்று(17) அம்பாறை ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

எமது நாட்டில் கடந்த 80 வருடங்களாக பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் காணப்படல் வேண்டும். மொழி பிரச்சினையே இவற்றுக்கெல்லாம் அடிப்படையான பிரச்சினை ஆகும். பல நாடுகளில் பல மொழிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் பல கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இரு மொழிகள் காணப்படுகின்ற எமது நாட்டில் நாம் இரு மொழிகளையும் கற்று கொண்டு புரிந்துணர்வோடு வாழா விட்டால் என்ன பயன்? தமிழ் இளையோர்கள் சிங்களத்தையும் சிங்கள இளையோர்கள் தமிழையும் கற்று கொள்ள வேண்டும். ஒரு தாயின் குழந்தைகளாக வெளிநாடுகளில் உள்ள நன்மைகளையும் பெற்று கொண்டவர்களாக நாம் இந்நாட்டில் வாழ முடியும்.

சமயங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். நான் பகவத்கீதை , திருக்குர்ஆன் ஆகிய புனித நூல்களையும் படித்து இருக்கின்றேன். இறந்த பின்னர் ஜனாஸாவை எரிக்க கூடாது புதைக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மார்க்கம் சொல்லி கொடுக்கின்றது. அதை அவர்கள் பின்பற்றுகின்றனர். இருந்தாலும் நாம் எமது சுகாதாரத்தை பற்றி இப்போது சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். உலக சுகாதாரமும் எமது நாட்டு சுகாதாரமும் என்ன சொல்கின்றனவோ அதன்படி வாழ வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

மேலும் புதைக்கலாம் என்று சுகாதாரம் கூறினால் நாட்டிலே உயர் பதவிகளில் இருக்க கூடியவர்கள் இந்நாட்டு மக்களுக்கு சரியான முறைகளில் அதற்கான வழிகளை செய்து கொடுக்க வேண்டும். புதைத்தால் விஷ கிருமிகள் அதிகரிக்கும் எரித்துதான் ஆக வேண்டும் என்று உலக சுகாதாரம் கூறினால் அதை நிச்சயமாக ஏற்று கொள்ளதான் வேண்டும். காரணம் இறந்தவர்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற மற்ற மக்களை பற்றி யோசிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு யோசித்து செயற்படுகின்றபோது இஸ்லாமியர்கள் குறித்த இன்னமும் கூடுதலான கௌரவத்தையும் மரியாதையையும் அது ஏற்படுத்தும்.

ஆனால் ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம். மனிதன் இயற்கைக்கு செய்த தவறினால் இயற்கை மனிதனுக்கு கொடுத்த முதலாவது தண்டனை சுனாமி இரண்டாவது தண்டனை கொரோனா விஷ கிருமி ஆகும். கொடிய கொரோனா இந்த உலகத்தை விட்டு நீங்குவதற்கு எல்லா பிரார்த்தனைகளையும் செய்வோம். சாந்தி சமாதானம் ஆகியவற்றை எப்படி உருவாக்க வேண்டும்? என்று இலங்கை தாய் மண்ணில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு நாங்கள் சொல்லி கொடுக்க முடியுமே ஒழிய ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து எமது நாட்டுக்கான சாந்தியையும் சமாதானத்தையும் கொண்டு வர வேண்டிய அவசியமே கிடையாது .

அத்துடன் எனது குடும்பத்தின் பிரச்சினையை அடுத்த வீட்டுக்கு கொண்டு செல்வதற்கு நான் தயாராக இல்லை. ஒரு குடும்பத்தின் பிரச்சினை அந்த குடும்பத்துக்கு உள்ளேயே முடித்து கொள்ளப்பட வேண்டும் என்றுதான் யோசிக்கின்றேன். இலங்கை என்பது என்னுடைய குடும்பம். எமது நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு நல்ல போதனைகளை கொடுக்க முடியும். காரணம் இலங்கை திருநாட்டில் நல்ல தர்மங்கள் நிலவுகின்றன என கூற விரும்புகின்றேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 7 =

*