;
Athirady Tamil News

ஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் – வேலணை பிரதேச சபை உறுப்பினர்!!

0

அன்பார்ந்த தாயக மக்கள் அறிவது
நாளை முதல் எதிர்வரும் 29ம் திகதி வரையிலான காலப்பகுதியில் தமிழர் தாயகத்திலுள்ள பொதுமக்களுக்கு உரித்தான பாரம்பரியமிக்க நிலங்களை ஆக்கிரமித்து சிறிலங்கா ராணுவம் மற்றும் கடற்படையினரின் முகாம்களை விஸ்தரிக்கும் வகையில் திட்டமிட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது ராஜபக்ச அரசாங்கம் .

ரணில் – மைத்திரி ஆட்சிக்காலப்பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகள் பலவற்றை அந்த அரசு முன்னெடுத்திருந்தபோதிலும் அவற்றினை தமிழ்த்தேசிய கட்சிகள் , செயற்பாட்டாளர்கள் , பொதுமக்களென்று அனைவரும் ஒன்றிணைந்து இலகுவாக முறியடித்திருந்தோம் . அக்காலப்பகுதியில் சாதாரணமாக பத்து பேர் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தபோது கூட நில அளவை திணைக்களத்தினர் பின்வாங்கி சென்றிருந்தனர். ஆனால் தற்போதைய நிலைமை அவ்வாறில்லை முப்படைகளின் முழுமையான பிரசன்னத்தோடு எம் உறவுகளின் வளமிக்க காணிகளை அபகரிக்க முற்படுகின்றது இந்த அரசு . ஆகவே குறைந்தபட்சம் ஆயிரம் பொதுமக்களாவது காணிகளை அளவிடுகின்ற பிரதேசத்தில் ஒன்று திரண்டு எமது பலத்தினை ராஜபக்ச அரசுக்கு மாத்திரமல்லாது சர்வதேசத்துக்கும் காட்ட முனையவேண்டும் .

அன்பு உறவுகளே நாளை காலை ஒன்பது மணிக்கு மண்டைதீவில் காணி அபகரிப்பு அராஜகத்தினை ராஜபக்ச அரசு ஆரம்பிக்கின்றது . நீங்கள் இதற்கெதிராக ஒருநாள் முழுவதும் உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை . நீங்கள் காலை 8 . 15 மணியளவில் மண்டைதீவில் திரண்டால் போதுமானது . பெரும்பாலும் ஒன்பது மணியளவிலேயே நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை தருவர் . அவர்கள் அவ்வாறு வருகை தரும்போது எமது எதிர்ப்பலைகளை சாத்வீக முறையில் சில நிமிடங்கள் வெளிப்படுத்தினால் போதுமானது . காணிகளை அபகரிக்கும் திட்டத்தினை கைவிட்டு அவர்கள் திரும்பிச்செல்வர் .

இது வெறுமனே மண்டைதீவுக்கு உரிய பிரச்சினை அல்ல .ஒட்டுமொத்த தமிழர் தாயகத்திலும் தொடரவுள்ள இன அழிப்பின் ஓர் அங்கமான நடவடிக்கையே இது . ஆகவே அன்புக்குரிய உறவுகளே அரசியல் , தனிமனித விருப்பு – வெறுப்புகளை களைந்து ஒரே குரலில் எமது எதிர்ப்பினை நாளை மண்டைதீவில் வெளிப்படுத்துவோம் வாரீர் .-
கருணாகரன் நாவலன் ( தீவகம் தெற்கு- வேலணை பிரதேச சபை உறுப்பினர் ) .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*