அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்… துணை அதிபராக பதவியேற்றார்..! (படங்கள்)
அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்று சரித்திர சாதனை படைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியான இன்று அமெரிக்காவின் மரபுப்படி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலித்த பின்னர் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வலது கையை உயர்த்தியும் இடது கையை பைபிள் மீது வைத்தும் பதவியேற்றுக்கொண்டார் ஜோ பிடன். அமெரிக்காவின் அரசியல் சாசனங்களை மதித்து செயல்படுவேன் என்பதை பதவிப்பிரமாணத்தின் போது உறுதியளித்தார் கமலா ஹாரிஸ்.
இதனிடையே கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.