;
Athirady Tamil News

இஸ்லாமிய நாடுகளின் தடை முதல் மெக்ஸிகோ சுவர் வரை..டிரம்பின் உத்தரவுகளை முதல் நாளே காலி செய்யும் பைடன்!! (படங்கள்)

0

இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முதல் மெக்ஸிகோ சுவர் வரை டிரம்பின் உத்தரவுகளை முதல் நாளே பைடன் ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதேபோல சில குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வர டிரம்ப் கடந்த 2017ஆம் ஆண்டு தடை விதித்தார்.

டிரம்பின் இந்த உத்தரவு சர்வதேச அரங்கில் மிகப் பெரியளவில் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தடை உத்தரவு அமலிலிருந்தது.

மெக்ஸிகோ சுவர்

அதேபோல, மெக்ஸிகோவில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுக்கவும் எல்லையில் சுவர் எழுப்பவும் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த சுவருக்குத் தேவையான நிதி அளிக்க நாடாளுமன்றம் மறுத்தபோது, அமெரிக்கா ஷட் டவுன் ஆகும் நிலைக்கும் தள்ளப்பட்டது. இருப்பினும், டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

டிரம்ப் உத்தரவுகளை ரத்து செய்யும் பைடன்

இந்தச் சூழ்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக இன்னும் சில மணி நேரங்களில் பைடன் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், முதல் டிரம்பின் பல உத்தரவுகளை பைடன் ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடை நீக்கம்

இன்று பதவியேற்ற கையோடு பைடன் 17 உத்தரவுகளைப் பிறப்பிக்கவுள்ளார். அதில் முதலாவதாக இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் உத்தரவும் இடம் பெற்றுள்ளது. மேலும், குடியேற்றக் கொள்கைகளை மறுசீரமைக்கவும் அவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட உள்ளார். மேலும், தற்போது அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவது குறித்தும் அவர் திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச அமைப்புகள்

பல்வேறு சர்வதேச அமைப்புகளுடனும் டிரம்ப் மோதல் போக்கையே கடைபிடித்துவந்தார். சில மாதங்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் டிரம்ப் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். பைடன் காலத்தில் இவையும் சுமூகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலும் உலக சுகாதார அமைப்புடனும் பைடன் ஆட்சியில் அமெரிக்கா மீண்டும் இணைந்து செயல்படும் என்று பைடனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடனை திருப்பி அளிக்க முடியாதவர்கள்

மேலும், அமெரிக்காவில் கொரோனா காரணமாக வேலையிழந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் உரிய நேரத்தில் கடனை திருப்பி அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா பாதிப்பு காரணமாகக் கடனை திருப்பியளிக்க முடியாத நிலையிலுள்ளவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யவும் குறிப்பிட்ட காலத்திற்குத் தடை விதிக்கவுள்ளார்.

மாஸ்க்கும் மெக்ஸிகோ சுவரும்

இது தவிர அமெரிக்காவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் உத்தரவையும் அவர் பிறப்பிக்கவுள்ளார். ஜோ பைடன் ஆரம்ப நாள்கள் முதலே கொரோனாவின் தீவிர தன்மை குறித்தும் அதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் கட்டப்பட்டு வரும் சுவரின் கட்டுமானப் பணிகளுக்கும் அவர் தடை விதிக்கவுள்ளார்.

கலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ! (படங்கள்)

அடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்!!

அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்… துணை அதிபராக பதவியேற்றார்..! (படங்கள்)

“மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..” முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − six =

*