தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு! (வீடியோ, படங்கள்)
தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை அரசு மீது மட்டும் போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் விசாரணைக்கு வலியுறுத்தும் நிலைப்பாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரில் இன்று முற்பகல் சிலர் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் ஒளிப்படங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி இருந்த போராட்டக்காரர்கள் கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களையும் கொண்டிருந்தனர்.
எதிர்வரும் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் கட்டாயமாக சுட்டிக் காட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
போராட்டக்காரர் தாங்கிச் சென்ற பதாதைகளில் சிங்கள மொழியிலான வாசகங்களும் உள்ளடங்கியிருந்தன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”