;
Athirady Tamil News

பழமை வாய்ந்த கீரிமலை மகாமுத்துமாரி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்!! (வீடியோ)

0

கடற்கரை ஓரத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் மிகவும் பழமை வாய்ந்த யாழ்.கீரிமலை ஸ்ரீ மகாமுத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(16) முற்பகல் -11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாலய மகோற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளது. அந்த வகையில் மகோற்சவத்தின் பத்தாம் நாளான எதிர்வரும்-25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-09 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 11 ஆம் நாளான 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்- 10 மணியளவில் தேர்த் திருவிழாவும், 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை மாசிமகத் தீர்த்தோற்சவத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

மேலும், அடுத்த மாதம்-01 ஆம் திகதி இரவு கப்பல் திருவிழா சிறப்பாக இடம்பெறும்.

கொடியேற்றம் முதல் தீர்த்தோற்சவம் வரை காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ளதுடன் விசேட உற்சவங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை உற்சவம் காலை-09 மணியளவில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகி நண்பகல்-12 மணியளவில் நிறைவு பெறும்.

மாலை உற்சவம் மாலை-05.30 மணியளவில் சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகி இரவு-08. 30 மணியளவில் நிறைவடையும்.

கீரிமலை ஸ்ரீ மகாமுத்துமாரி அம்பாள் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததோர் ஆலயமாகும். கீரிமுகம் மாறிய நகுல முனிவர் வெப்புநோய் மாற்றுவதற்கு மகாமாரி அம்பாளைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார் எனவும், இதன்பின்னர் மாருதப்புரவீகவல்லி அம்மையார் நகுலமுனிவர் சொற்படி புனருத்தாரணம் செய்து நிபந்தனைகளை அமைத்து வழிபட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இவ்வாலயம் கடந்த கால யுத்தத்தால் பேரழிவைச் சந்தித்திருந்த நிலையில் தற்போது படிப்படியாகப் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

இவ்வருட மகோற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொள்ளுமாறு மேற்படி ஆலய ஆதீன ஹர்த்தாவும், பிரதமகுருவுமான சிவஸ்ரீ நகுல நவராஜ ந. உமாபதீஸ்வரக் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை , அவர் எமது செய்தி சேவைக்கு விசேடமாகத்தெரிவித்த கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*