டாலர் கடத்தல் வழக்கு- கேரள கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது..!!

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்க இலாகா, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்த ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரும் சிக்கினார்.
தங்க கடத்தலில் ஈடுபட்டவர்கள் டாலர் கடத்தலிலும் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தனி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கிலும் ஸ்வப்னா, சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தங்க கடத்தல் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்குகளில் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் டாலர் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஈப்பன்(வயது49) என்பவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்பேரில் சந்தோஷ் ஈப்பன் சுங்கத்துறை அதிகாரிகளின் முன்பு ஆஜரானார். விசாரணைக்கு பின் அவரை டாலர் கடத்தல் வழக்கில் கைது செய்தனர். பின்பு அவர், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 3பேர் ஜாமீன் ஆகியவற்றின் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.