;
Athirady Tamil News

துவள வைக்கும் தோள்பட்டை வலி துரத்தியடிக்க எளிய வழி! ! (மருத்துவம்)

0

நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு தோள்பட்டை வலி வந்தால் அதிலும், குறிப்பாக இடதுகை தோள்பட்டையில் வலி வந்தால் உடனே பயம் கொள்வார்கள். காரணம், இது ‘இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ?’ என்று. ஆனால், அவ்வாறு ஏற்படும் தோள் பட்டை வலி உண்மையில் இருதய நோய் சார்ந்த பிரச்னையாக இல்லாமல் தோள் பட்டையில் உள்ள தசைகள், தசை நார், மஜ்ஜை, எலும்பு ஆகியவற்றை சார்ந்ததாகவும் இருக்கலாம்.

அப்படி நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு அதிகம் வரக்கூடிய ‘இறுகிய தோள்பட்டை’ வலியை பற்றியும், அதன் பின்னால் உள்ள காரணங்கள், தீர்வுகள் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.இறுகிய தோள்பட்டை…இதனை ஆங்கிலத்தில் மருத்துவர்கள் ‘Frozen Shoulder’ என்று அழைப்பர். அதாவது, நம் தோள் பட்டை சிறுக சிறுக இறுகுவதால் வலி ஏற்படும். மேலும், அசைவுகள் பாதிக்கும். அதனால் கையை தூக்கமுடியாமல் போகவும், வேலைகள் செய்ய அசௌகரியமாகவும் இருக்கும்.

தோள் பட்டை…

தோள் பட்டையை மொத்தம் மூன்று எலும்புகள் சேர்ந்து உருவாக்குகிறது. தோள் பட்டை மூட்டை சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். இதனால் மூட்டு நகராமல் வலிமையுடன் இருக்கும். தோள் பட்டையை சுற்றிலும் தசைகள் உள்ளன. அதில் முக்கியமாக நான்கு தசைகளின் ‘இணைப்பு நார்கள்’ சேர்ந்து தோள் பட்டை எலும்பை சுற்றி ‘கப்’ போன்று அமைந்து பாதுகாக்கும். இவை தவிர எலும்பு மூட்டு, தசைகளை சுற்றி ஜெல்லி போன்ற பைகள் இருக்கும். இது எலும்பும், தசையும் உரசாமல் தடுக்க உதவும்.

இறுக்கத்தின் படிநிலைகள்…

முதல் நிலை: வலி லேசாக தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் அசைவுகளுக்கு பெரும் பாதிப்பு இருக்காது. எப்போதும் போல கைகளால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். பின் நாட்கள் செல்ல வலியின் அளவு அதிகமாக மாறும். இந்த நிலையில் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர் இது சாதாரணமாக ஏற்படும் வலியென்று எண்ணி தைலம், மாத்திரை போன்ற வலி நிவாரணி மருந்துகளை உபயோகிப்பர்.இரண்டாம் நிலை: இதில் வலி குறையத் தொடங்கிவிடும். ஆனால், கையின் அசைவுகள் முற்றிலும் பாதிக்கக்கூடும். கையை மேலே உயர்த்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய முடியாமல் போகும்.

காரணங்கள்…

தோள் பட்டை மஜ்ஜை அழற்சி பெற்று இறுகுவதற்கு இதுதான் காரணம் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனினும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கட்டாயம் ஒரு முறையாவது ‘தோள் பட்டை இறுக்கம்’ வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் பக்கவாதம் வந்தவர்களுக்கு தோள்பட்டை இறுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமில்லாமல், தோள் பட்டையில் எலும்பு முறிவு, எலும்பு இடப்பிழற்வு (dislocation), தசைக்காயம், தசை நார் கிழிவது, அதிக ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், புகைப் பிடிப்பது போன்ற காரணங்களால் கூட ‘இறுகிய தோள்பட்டை’ வலி வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், மார்பகம் நீக்கும் அறுவை சிகிச்சை செய்த பின் கைகளை மேலே உயர்த்த பயம் கொண்டு கைகளை அசைக்காமல் வைத்திருந்தால் கூட இப்பிரச்னை வரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வரலாம்..?

*நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு வரக்கூடும்.

*ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் எனினும், பெண்களின் விகிதம் தான் அதிகம்.

அறிய வேண்டிய அறிகுறிகள்…

*ஆரம்பத்திலேயே வலியின் அளவு உயராது. படிநிலைகளைப் பொருத்து தோள்பட்டை வலி சிறுக சிறுகதான் உயரும்.

*தலை வாருவது, தலைக்கு குளிப்பது போன்ற தலைக்கு மேல் கை உயர்த்தி செய்யும் எந்த வேலையும் செய்ய முடியாது. ஏனென்றால் இறுக்கத்தினால் அசைவுகள் பாதிக்கும்.

*கைகளை முதுகுக்கு பின் கொண்டு வந்து உடை உடுத்துவது பெண்களுக்கு சிரமமாக இருக்கும்.

*சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரண்டு தோள் பட்டையும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் தூக்க முடியாமல் போகும்.

*பாதிக்கப்பட்ட தோள்பட்டை பக்கம் படுத்து உறங்குவது கடினமாக இருக்கும். அதிக வலி உண்டாகும்.

கண்டறிய வழிகள்…

மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் உடனே அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் சோதித்து பார்த்து ‘இறுக்கமான தோள்பட்டை’ என உறுதி செய்வார். 80% எக்ஸ்-ரே, ஸ்கேன் ஆகியவை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், இயன்முறை மருத்துவ பரிசோதனையிலேயே தெரிந்துவிடும்.

தீர்வுகள்…

*இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் வலியைக் குறைக்கலாம்.

*இறுக்கத்தை தளர்த்தி தோள் பட்டை மூட்டை இலகுவாக மாற்ற இயன்முறை மருத்துவர் சில நுட்பங்களை கையாள்வார்கள்.

*தவிர, சில பயிற்சிகள் கற்றுக் கொடுப்பார்கள். அதை செய்வதால் இறுக்கம் மேலும் அதிகரிக்காமல் இருக்கும். சுற்றியுள்ள தசைகளும் வலுப்பெறும்.

தவிர்க்க வேண்டியவை…

*தாமாக கடையில் வலி நிவாரணி மருந்துகளை வாங்கி உட்கொள்வதன் மூலம் தற்காலிகமாக வலி குறையுமே தவிர மீண்டும் சில மணி நேரங்களில் வலி தோன்ற ஆரம்பித்துவிடும்.

*மேலும் இறுக்கத்தை தளர்த்துவது மாத்திரையால் முடியாது என்பதால் நாட்களை வீணாக்க வேண்டாம். நாட்கள் கூடக்கூட இறுக்கம் அதிகமாகி, பின் முற்றிலும் தோள்பட்டையை அசைக்க முடியாமல் போகும்.

*இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் மூன்று முதல் நான்கு வாரங்களில் முழுவதும் சரி செய்து விடலாம். ஆனால், தாமதமாக ஆரம்பித்தால் இரண்டு மாதங்களுக்கு மேல் கூட ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் தோள்பட்டை இறுக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு ‘தோள் கொடுப்பான் தோழன்’ எனும் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக மாறலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.