;
Athirady Tamil News

யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!! (படங்கள் & வீடியோ)

0

யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் அனுசரணையில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை-09.30 அணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை நாவாந்துறை புனித பரலோக ஆலய முன்றலில் நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் 3 பெண்கள் உள்ளிட்ட 64 பேர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். இவர்களில் நாவாந்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியிருந்தனர்.

வழமையாகத் தவக்காலத்தை முன்னிட்டு நூற்றிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்ததான முகாமில் பங்குபற்றுவார்கள். இந்த வருடமும் இளைஞர்கள் பலரும் இரத்ததானம் வழங்கியுள்ளனர் என நாவாந்துறை சென்.மேரிஸ் இளைஞர் கழகத்தின் சார்பாக மரியதாஸ் நிரோஜன் தெரிவித்தார்.

வருடம்தோறும் இடம்பெற்று வரும் குறித்த இரத்ததான முகாம் இவ்வருடம் ஆறாவது தடவையாக இடம்பெறுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி மருத்துவர் வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் மற்றும் இரத்தவங்கியின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் தங்கராஜா ரவினதாஸ் உள்ளிட்ட இரத்தவங்கிப் பிரிவு உத்தியோகத்தர்கள் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, நாவாந்துறை சென். மேரிஸ் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்படும் இரத்ததான முகாமில் பெரும்தொகையான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியுள்ளனர். தற்போது நிலவி வரும் குருதித் தட்டுப்பாட்டு நிலைமையினை ஓரளவு சுமுகமாக்கக் கூடிய வகையில் இளைஞர்கள் முன்வந்து குருதிதானம் வழங்குவது மகிழ்ச்சிக்குரியது எனயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி மருத்துவர் வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் தெரிவித்தார்.

இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய கழகங்களும், இளைஞர் கழகங்களும் இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்து நடாத்த முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + six =

*