வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கோரோனா தொற்று !!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 4 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 431 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 கைதிகள் அடங்குகின்றனர். நேற்றுமுன்தினம் கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்.
மேலும் மல்லாவியில் புத்தளத்திலிருந்து வருகை தந்த பெண் உள்பட இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்கு புத்தளத்திலிருந்து வருகை தந்தோர் பங்கேற்றிருந்தனர். அந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. மேலும் இருவருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”