சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு புதிய நடைமுறை!!

சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்காக அவர்களின் உறவினர்களுக்கு குறித்த திகதி மற்றும் நேரமொன்றை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதற்கான புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.prison.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக e-visit தகவல் அமைப்பு மூலம் தேவையான தரவை உள்ளிட்டு, குறித்த கைதியை பார்வையிடுவதற்கு திகதி மற்றும் நேரமொன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியே தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் இது பொருந்தும். சிறைக் கைதிகளை பார்வையிடவிரும்பும் கைதிகளின் உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் இவ்வாறு பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் கைதியை பார்வையிடுவதற்கான உரிய திகதி மற்றும் நேரத்தை தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிறைச்சாலையில் இடம்பெறுகின்ற இட நெருக்கடியை குறைப்பதற்கும் கைதிகளின் உறவினர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைப்பதற்கும் இந்த புதிய வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.