இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் யாழ். பல்கலைக்கு நாளை விஜயம்!

நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு நாளை வருகை தரவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில், பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இடம்பெறவுள்ள காலை நேர விருந்துபசாரத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் கலந்து கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இனிவருங் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை உள்வாங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள வசதி, வாய்ப்புகள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பல்கலைக்கு வருகின்ற இராஜாங்க அமைச்சர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”