;
Athirady Tamil News

’அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்து விடக்கூடாது’ !!

0

இந்த அரசியல் பிரமுகர்களின் வலைக்குள்,மதத் தலைவர்கள் விழுந்து விடக்கூடாதென, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், தமிழ்த் தேசிய பரப்பில் இருந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும், மதத்தலைவர்களும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் வவுனியாவில் ஒன்று கூடி கலந்துரையாடல் மேற்கொண்டதாக ஊடகங்களில் வந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும மதத்தலைவர்கள் எல்லோரும் ஒன்று கூடி இதற்கு ஆதரவு தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு, ஆன்மீக ரீதியில் செயற்படும் மதத்தலைவர்கள் இந்த அரசியல் பிரமுகர்களின் வலைக்குள் விழுந்துவிட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றதெனவும், அவர் கூறியுள்ளார்.

“2004ஆம் ஆண்டு, மதத்தலைவர்கள் எல்லோரும் ஒன்று கூடி அன்று நடந்த ஜனநாயக விரோத செயலை கண்டிக்காதது ஏன் என வினவிய அவர்,
2010ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்பு இவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கவில்லை அது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.

“எல்லாவற்றுக்கும் மேலாக, 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நல்லிணக்க ஆட்சிக் காலத்தில், மதத்தலைவர்களை அழைத்து இவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தால், வெகு இலகுவாக எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை? அந்த நேரத்தில் பதவி மோகம் கொண்ட ஒரு சிலருக்கு எதிர் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுகம் கிடைத்த படியால் ஒரு கட்டமைப்பு தேவை ஏற்படவில்லை.

“2020ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவின் பதவி பறிபோய்விட்டது. மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. அதனால் மதத்தலைவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்த நபர்களுக்கு மதத்தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழ் மக்களுக்கான அரசியல்வாதிகளின் வரலாற்றுத் தவறுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துவிடும்” அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.