;
Athirady Tamil News

வெல்லாவெளி –வக்கியல்ல பிரதான வீதியை புனரமைத்த தருமாறு மக்கள் கோரிக்கை!!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி –வக்கியல்ல பிரதான வீதியை புனரமைத்த தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை கண்டி வீதியையும் இணைக்கும் வெல்லாவெளி பிரதான வீதியாகவும் காணப்படும் இந்த வீதியானது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி நெல்லிக்காடு கூழாவடி பாலயடிவட்டை 35ஆம் கிராமம் கண்ணபுரம் சிங்கள கிராமம் 34 ஆம் கிராமம் உட்பட பல கிராம மக்கள் தொடர்ச்சியாக பயணம் செய்யும் பிரதான வீதியாகும்.

இந்த வீதியூடாக அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கு மட்டக்களப்பிலிருந்து மிக விரைவாக செல்லக்கூடிய நிலையுள்ளபோதிலும் வீதி புனரமைக்கப்படாமையினால் இந்த வீதியினால் அவ்வாறான போக்குவரத்துகள் மிகவும் குறைவான நிலையிலேயே நடைபெற்றுவருகின்றது.

இவ் வீதியானது வெல்லாவெளி சந்தியிலிருந்து 13 கிலோ மீற்றர் அம்பாறை கண்டி வீதியினை இணைக்கும் தூரமாகவும் இந்த வீதியினால் தொடர்ச்சியாக அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு வரைக்கும் போக்குவரத்துசபை பஸ்கள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த வீதியானது கடுமையான முறையில் சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பாடசாலை மாணவர்கள்,வர்த்தர்கள்,பொதுமக்கள்,விவசாயிகள் மிகவும் சிரமத்தின் மத்தியில் பிரயாணம் செய்துவருகின்றனர்.

மழை காலங்களில் மோட்டார் சைக்கிள்கள் பஸ் வண்டிகள் முச்சக்கர வண்டிகள் வியாபாரம் செய்கின்ற மரக்கறி வண்டிகள் வீதியால் செல்லும் போது விபத்துக்களும் ஏற்படுவதுடன் விபத்து மரணங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியால் கனரக வாகனங்கள் மண் ஏற்றி செல்கின்ற போது வீதியானது சேதமானது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 35 ம் கிராம் கிழக்கு கண்ணபுரம் அழியார் வட்டை கன்டம் கன்னியெம்பை ஆகிய பிரதேசங்களில் மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களினால் இந்த வீதிகள் அதிகளவில் சேதமடைவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியால் அறுவடை காலங்களில் விவசாயிகள் நெல்லைக்கொண்டுசெல்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இவ் வீதியால் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லும் போது உரிய நேரத்துக்கு பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவதுடன் வைத்தியசாலைக்கு செல்லும் போதும் வீதி குன்றும் குழியுமாக உள்ளதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் நோயாளிகள்,காட்டு யானையினால் தாக்கப்பட்டவர்கள்,பாம்பு தீன்டியவர்கள்,வாகன விபத்துக்களில் படுகாயமடைபவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லமுடியாத காரணத்தினால் மரணங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் இந்த வீதியினை கவனத்தில் எடுத்து விரைவாக திருத்தி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + sixteen =

*