கோண்டாவிலில் இரத்ததான முகாம்!!! (படங்கள்)
கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம், மத்திய சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை-09 மணி முதல் பிற்பகல்- 02.30 மணி வரை கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீசிவகாமி அம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாடான நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளது.
மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் கோண்டாவில் தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த 22 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.
கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சின்னத்தம்பி ஆனந்தராஜா குறித்த இரத்ததான முகாம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த இரத்ததான முகாம் நிகழ்வை ஏனைய கிராம இளைஞர்களுக்கு முன்மாதிரியானதொரு நிகழ்வாக எமது கிராம இளைஞர்கள் ஒழுங்கமைத்து நடாத்துகின்றனர். இரத்ததான முகாம் நிகழ்வை எமது சங்கத்தின் செயலாளர், பொருளாளர் போன்றோர் ஏனைய இளைஞர்களை ஒன்றிணைத்துச் சிறந்த முறையில் நடாத்தியுள்ளனர்.
இவ்வாறான இரத்ததான முகாம்களை நாம் எதிர்வரும் காலங்களிலும் ஏற்பாடு செய்து நடாத்துவோம்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினருக்கு கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”