காலையில் பாஜகவில் இணைந்தார்.. மாலையில் மதுரை வடக்கு தொகுதிக்கு மாஜி திமுக எம்எல்ஏ சரவணன் சீட்! (படங்கள்)

திமுகவிலிருந்து விலகி இன்று காலை பாஜகவில் இணைந்த பி. சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக இருந்தவர் சரவணன். இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ரேடியோதெரபியில் எம்டி முடித்துள்ளார். மதுரையில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நடத்தி வருகிறார். மேலும் சூர்யா அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார். புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.
மருத்துவர் பிரிவு
இவர் திமுகவின் மருத்துவர் பிரிவின் துணை தலைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட சரவணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் முனியாண்டியை தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி தனக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என கருதியிருந்தார் சரவணன்.
முருகன்
ஆனால் அந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் ஏதாவது ஒருதொகுதி ஒதுக்கப்படும் என கருதியிருந்தார். வெள்ளிக்கிழமை வெளியான வேட்பாளர் பட்டியலில் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. இதையடுத்து அவர் இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
டாக்டர் சரவணனுக்கு சீட்
இதனிடையே தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் மொத்தம் 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் மதுரை வடக்கு தொகுதி டாக்டர் சரவணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி பாஜக சார்பில் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும் என உறுதியாகியிருந்த நிலையில் சரவணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை
இதுகுறித்து சரவணன் கூறுகையில் திமுக தலைமை மீது எனக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்தவர்கள் மாவட்ட நிர்வாகத்தினர். மதுரை பகுதியில் எனக்கு மக்கள் நன்கு அறிமுகமானவர்கள். நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன். ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இருந்தேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன்.
கொரோனா தடுப்பூசி
பிரதமர் மோடியின் தலைமையில் பணியாற்றுவதில் எனக்கு சந்தோஷம். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நம் நாட்டு மக்களுக்கு கொடுப்பதோடு வெளிநாடுகளுக்கு செல்கிறது. இது பிரதமர் மோடியின் சாதனை என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றார் சரவணன். ஊட்டி, தளி, விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்.

