;
Athirady Tamil News

சுன்னாகம் அரிகர புத்திர ஐயனார் மகோற்சவப் பெருந்திருவிழா ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

0

யாழ்ப்பாணம் சுன்னாகம் தாளையம்பதி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந் திருவிழா இன்று வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை-06 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை- 07.30 மணியளவில் மூலஸ்தான பூசையும், காலை- 08 மணியளவில் வசந்தமண்டப பூசையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நாதஸ்வர தவில் முழக்கங்களுடன் மணியளவில் கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இன்றைய கொடியேற்ற உற்சவத்தில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அடியவர்களும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் பதினான்கு தினங்கள் இவ்வாலய மகோற்சவப் பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளது

இவ்வாலய மகோற்சவத்தில் எதிர்வரும்-26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை தேர்த் திருவிழாவும், 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

மகோற்சவ காலங்களில் காலை உற்சவம் தினமும் காலை-06 மணியளவில் ஆரம்பமாகி முற்பகல்- 10.30 மணியளவில் நிறைவுபெறும். மாலை உற்சவம் பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகி இரவு-09 மணியளவில் நிறைவு பெறும்.

சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலயப் பிரதமகுருவாகத் திகழும் முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் இவ்வாலய மகோற்சவ குருவாக இவ்வருட மகோற்சவ கிரியைகளையும் ஆற்றுவார்.

இவ்வாலய மகோற்சவப் பெருந் திருவிழாவை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக ஆலயச் சூழலில் பல நூற்றுக்கணக்கான மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு ஆலயச் சூழல் எங்கும் ஒளிமயமாக காட்சியளித்தது.

மகோற்சவப் பெருந்திருவிழா நாட்களில் இரவு நேர உற்சவ காலங்களில் தினமும் ஆலயச் சூழல் முழுவதும் மின்னொளியில் பிரகாசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சுன்னாகத்தில் தாளைகள், வயல்கள் சூழ்ந்த பிரதேசத்தில் திருவருட் சக்தி கொண்ட கிராமிய வழிபாடுகளை உள்ளடக்கிய மிகவும் புராதனமான ஆலயமாக சுன்னாகம் ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் ஆலயம் திகழ்வதாக மேற்படி ஆலய மகோற்சவ குரு முத்தமிழ்க் குருமணி சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.

இவ்வாலய மகோற்சவப் பெருந் திருவிழா தொடர்பாக அவர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்த கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + one =

*