உற்சாகத்தை அள்ளித் தரும் ‘லிமிட்டெட் காபி’!! (மருத்துவம்)

காபியை அமுதம் போல் அளவாக அருந்தினால் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காபி வரை மட்டுமே அருந்தலாம். இப்படி காபி குடிப்பதால் இதயநோய், சர்க்கரைநோய் மற்றும் தற்கொலையால் இறக்கும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. தினசரி ஐந்து கப்புக்கும் குறைவாக காபி குடிப்பவர்கள் நரம்பு தொடர்பான நோய்களாலும், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த நோயாலும் இறக்கும் வாய்ப்பு தள்ளிப் போடப்படுகிறது.
காபிக்கொட்டையில் கலந்திருக்கும் இயற்கையான ரசாயனக் கலப்பு இந்த நன்மையை உடலுக்குத் தருகிறது. காபியில் கலந்துள்ள இயற்கையான உயிர் பொருட்கள் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் தடையை சரி செய்கிறது என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். காபி என்பது தினமும் எடுத்துக்கொள்ளும் பேலன்ஸ்டு டயட்டில் ஒன்றாக உள்ளது.
காபி உற்சாகத்தையும் அள்ளித் தருகிறதாம். இது குறித்து உணவு ஆலோசகர் சங்கீதா கூறுகையில்,‘‘குறிப்பிட்ட அளவு காபி நமது உடலுக்குத் தேவை. காபி மற்றும் கோகோ சேர்க்கப்பட்ட சாக்லெட்டுகளில் காபின் உள்ளது. காபின் மூளைக்கு உடனடி சக்தியை அளித்து உற்சாகத்தை அள்ளித் தருகிறது. மனதை சுறுசுறுப்பாக்குகிறது. உடல் நிலை மற்றும் வயதுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் காபின் தேவையும் மாறுபடுகிறது. காபி குடிப்பவர்கள் சாக்லெட் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒரு நாளில் இரண்டு கப் காபி ஆரோக்கியமானதாக இருக்கும். காபியில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதை அளவோடு குடிக்கும் போது மட்டுமே, அதனால் ஏற்படும் நன்மைகளை அனுபவிக்க முடியும்,’’என்றார். லிமிட்டாக காபி குடிப்பது உள்ளத்துக்கு உற்சாகம் அளிக்கிறதாம். இனி கொண்டாடுங்கள் தினம் தினம் காபிடே…