;
Athirady Tamil News

மாரடைப்பு யாருக்கு வரும்? (மருத்துவம்)

0

பலத்த மழை வரும் முன் இடி, மின்னல், குளிர்காற்று, மெல்லிய தூறல் என வானம் சில அறிகுறிகளை காட்டும். அதைப் பார்த்தே உஷார் ஆகலாம். அதே போல இன்று இளைஞர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் மாரடைப்பையும், முன்கூட்டியே தெரிகிற சில அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு தடுத்துவிடலாம் என்கிறார்கள் இதய நிபுணர்கள். மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன? எப்படித் தப்பிக்கலாம்? இதய நோய் நிபுணர் ஜாய் எம்.தாமஸ் விளக்குகிறார்.

மாரடைப்பு என பொதுமொழியில் சொல்லப்படுவதன் மருத்துவ பெயர் மயோகார்டியல் இன்ஃபார்க்‌ஷன் (Myocardial infarction) என்பதாகும். இது வருவதற்கு முன்பே சில அறிகுறிகளைக் காட்டும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இரண்டு, மூன்று மாடி ஏறுபவருக்கு, ஒரு மாடி ஏறியவுடனே அதிக சோர்வு ஏற்படும். எந்த உடற்பயிற்சிகளையும் சரிவர செய்ய இயலாது. தொண்டை அல்லது நெஞ்சுப்பகுதியில் அழுத்துவது போல இருக்கும். ஏசியில் உட்கார்ந்து வேலை செய்தால் கூட, அதிகமாக வியர்க்க ஆரம்பிக்கும்.

இதயத்திலுள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால் ஆஞ்சினா பெக்டொரிஸ்’ என்னும் நெஞ்சுவலி வருவதும் கூட, மாரடைப்பு வருவதற்கான அறிகுறிதான். நீரிழிவு உள்ளவர்கள், சிகரெட், மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். பரம்பரை வழியாகவும் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் 55 வயதுக்கு குறைவான ஆண்களுக்கோ, 65 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கோ மாரடைப்பு வந்து இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வரலாம்.

மேல் வயிற்றுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டாலும், முதுகில் பிடிப்பும், சுருக்சுருக் எனக் குத்தினாலும் வாயுப்பிடிப்பு என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. இது மாரடைப்பு வருவதன் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். பலர் வாயுப்பிடிப்பையும் மாரடைப்புக்கான அறிகுறியையும் குழப்பிக்கொள்கிறார்கள். நடக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும் போதோ பிடிப்பு ஏற்படுவதும், பளுவான பொருளை தூக்கும்போது பிடிப்பு ஏற்படுவதும் மாரடைப்பு வருவதற்கான அறிகுறி. சாப்பிட்ட பிறகோ, இரவில் விருந்து சாப்பிட்டால் அதிகாலையில் ஏப்பம் வந்து முதுகில் பிடிப்பது வாயுப்பிடிப்பு.

‘ஆஞ்சினா பெக்டொரிஸ்’ வருவதைத்தான் நெஞ்சுவலி வந்தது என்பார்கள். நெஞ்சுவலி வரும் போது எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு எடுத்தால் உடலுக்கு ஆக்ஸிஜன் தேவை குறையும். இதனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.மாரடைப்பு வரும் போது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது முழுமையாகத் தடைபடும். இதயத்திலுள்ள தசைகளும் செல்களும் பெருமளவு பாதிப்படையும்.இன்று பலருக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக வேலைகளால் ஏற்படும் மன உளைச்சலே. தேவைக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலோ, ஒரே இடத்தில் மிக அதிக நேரமோ வேலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது. இதனால் போதுமான தூக்கமும் ஓய்வும் உடலுக்குக் கிடைப்பதில்லை.

நீண்ட நேரம் அமர்ந்து பணிசெய்பவர்கள் அடிக்கடி எழுந்து நடப்பது அவசியம். தேவையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். போன் வந்தால் கூட, எழுந்து நின்றபடியோ நடந்தபடியோ பேச வேண்டும்.பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது, அவர்களை இதய நோய்களில் இருந்து காக்கும் புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு நிற்கிறது. இதனால் 45 வயதுக்கு மேல் மாரடைப்பு வரும் அபாயம் அதிகம். 60 வயது தாண்டிய பெண்களில் நீரிழிவு உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்புண்டு.வேலையில் அதிக மன உளைச்சல் உள்ளவர்களுக்கும், உயர்பதவி அனுபவிப்பவர்களுக்கும் திடீரென வேலை போய்விட்டால், அந்த அதிர்ச்சியில் மாரடைப்புவரலாம்.

தம்பதிகளில் இணை திடீரென இறந்தால், அந்த அதிர்ச்சியாலும் மாரடைப்பு ஏற்படலாம். இளம் வயதில் கணவனை இழக்கும் மனைவிக்கு பாதுகாப்புணர்வு குறைவதும் இதற்குக் காரணமாகலாம். விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளிலும், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒருவருக்கு மாரடைப்பு எளிதாக வருகிறது.நடக்கும் போது நெஞ்சில் அழுத்தம் உருவானால், படி ஏறும் போது நெஞ்சு பிடிப்பது போல இருந்தால், தோள்பட்டையிலோ, தாடையிலோ வலி அடிக்கடி உருவானால் உடனடியாக இதய நோய் மருத்துவரைப் பார்ப்பது அவசியம். தோள்பட்டையில் உருவாகும் வலி முன்னங்கைகள் வரை ஊடுருவிச் சென்றாலும், கீழ் தாடையில் அடிக்கடி வலி வந்தாலும் அது இதய நோயின் அறிகுறியே.

பின்பக்க முதுகில் அடிக்கடி பிடிப்பு ஏற்பட்டாலும் இதயநோய் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.அதிக கொழுப்புள்ள ரெட் மீட் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி), நெய், வெண்ணெய் ஆகியவற்றை ஒதுக்கிவிட வேண்டும். பொரித்த உணவுகளையும் தவிர்த்து விட வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை சரியான அளவில் இருக்கிறதா என்பதையும் தகுந்த கால இடைவேளையில் பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதற்கான சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றை அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். மன உளைச்சலை போக்க யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகளை தினமும் செய்துவர வேண்டும். உணவில் மீன், உலர்பருப்புகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு… மீனில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலில் சரியான அளவில்
இருந்தால் இதயநோய்கள் வராமல் கட்டுப்படுத்தும்…’’

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 3 =

*