கேரளாவில் மலையோர கிராமங்களில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்..!!

கேரள மாநிலத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று மலப்புரம் மாவட்டத்தில் கல்பற்றா, வயநாடு, அரிக்கோடு ஆகிய மலையோர கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ்
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமையை போக்கும் வகையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு பணம் இல்லை என்ற நிலை மாறும். மேலும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குலைத்த மோடி அரசுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்றும் ராகுல் காந்தி வயநாடு பகுதியில் உள்ள மலையோர கிராமங்களுக்கு சென்று பழங்குடியின மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.