தெல்லிப்பழை துர்க்காதேவி தலைவாசல் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!! (படங்கள்)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் தலைவாசல் கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா சைவமக்களின் புனித நாளான இன்று வெள்ளிக்கிழமை(02) சிறப்புற நடைபெற்றது.
மேற்படி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ் சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் விழாவில் துர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.செந்தில்ராஜக் குருக்கள் அடிக்கல் நாட்டு விழாவுக்கான கிரியைகளை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம், மங்கள வாத்தியம் என்பன முழங்க இன்று காலை-09 மணியளவில் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து துர்க்காதேவி அம்மனின் அடியவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தனர்.
மேற்படி அடிக்கல் நாட்டும் விழாவில் அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், ஈவினைப் பிள்ளையார் ஆலயப் பிரதமகுரு தியாக. கெங்காதரக் குருக்கள், துர்க்காதேவி ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச. சிவஸ்ரீ, வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தினர், துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்கள், தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினர், துர்க்கை அம்மன் அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இவ்வாலயத்தின் நான்கு திசைகளிலும் ஏற்கனவே நான்கு கோபுரங்கள் கம்பீரமாக காட்சி தரும் நிலையில் இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தலைவாசல் கோபுரத் திருப்பணி ஆரம்பமாகியிருக்கிறது.
குறுகிய காலத்தில் இவ்வாலயம் வியத்தகு வளர்ச்சிகளைக் கண்டு வருவது துர்க்கை அம்மனின் திருவருளுக்குத் தக்க சான்று எனலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”