தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை!!

தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷ்னர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா, பெங்களூரு விக்டோரியா மருத்துவனைக்கு சென்று கொரோனா வார்டை ஆய்வு செய்தார் அத்துடன் கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெங்களூருவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நகரில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தடுப்பூசி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும்..
இதற்காக மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கூடுதலாக ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு போலீஸ் துறையின் ஒப்புதலை பெற்றுள்ளோம். அரசின் வழிகாட்டுதல்படி மராட்டியம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொேரானா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும். தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. பெங்களூரு மாநகராட்சியில் 8 மண்டலங்களிலும் தலா ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படும். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.