முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்… வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் பச்சைகொடி! (படங்கள்)
எஸ்ஆர்எச் அணியின் பௌலிங் கோச் முத்தையா முரளிதரனுக்கு நேற்றைய தினம் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்றைய தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் அவர் வழக்கம்போல தனது வேலைகளில் ஈடுபடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முரளிதரனுக்கு நெஞ்சுவலி
ஐபிஎல் 2021 தொடரின் எஸ்ஆர்எச் அணியின் பௌலிங் கோச்சாக இலங்கை லெஜெண்ட் முத்தையா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நேற்றைய தினம் பயிற்சியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
இன்று டிஸ்சார்ஜ்
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் அவரது உடல்நலம் தேறியுள்ளதாகவும் அவர் இன்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் ஆலோசனை
மேலும் அவர் தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என்றும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியுள்ளார். இதையடுத்து அவர் எஸ்ஆர்எச் முகாமில் உடனடியாக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஆர்எச் தோல்வி
இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வி கண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் வரும் புதன்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் எஸ்ஆர்எச் மோதவுள்ளது.
மோசமான மிடில் ஆர்டர்
எஸ்ஆர்எச் அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளதே அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக உள்ளது. கேன் வில்லியசம்சன் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் பட்சத்தில் அந்த அணியில் இணைவார் என்று டேவிட் வார்னர் முன்னதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.