யாழ். மாநகரசபை அசமந்தம், “அதிரடி” செய்தியின் எதிரொலி: விழித்தெழுந்தது மாநகரசபை.. (படங்கள்)

யாழ். மாநகரசபை அசமந்தம், “அதிரடி” செய்தியின் எதிரொலி: விழித்தெழுந்தது மாநகரசபை.. (படங்கள்)
யாழ்.கந்தர்மடம் பகுதியில் உள்ள பிரதான வெள்ள வடிகாலில் ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் பொருட்கள் குப்பைகள்கள் நிறைந்து இருப்பதாகவும் கடந்த பாரிய மழையின் காரணமாகவே குறித்த பொருட்கள் குறித்த வெள்ள வடிகாலினுள் வந்ததாகவும் இதனால் அப் பகுதி பாரிய சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாகவும் இது தொடர்பில் மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று இன்றைய செய்திதாள் ஒன்றிலும் “அதிரடி” உட்பட சில இணையத்தளங்களிலும் செய்தி பிரசுரமாகியிருந்தன.
இன்று மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களின் பணிப்பின் பேரில் மாநகரசபை உறுப்பினர் பிரதீபன், யாழ்.மாநகர சபை வடிகால் தூர்வாரும் அணியின் மேற்பார்வையாளர் ஜெயராஜ் அவர்களும் குறித்த வெள்ள வடிகாலினுள் இறங்கி நீண்ட தூரம் நடந்து சென்று குறித்த பகுதியைப் பார்வையிட்டனர்.
குறித்த பகுதி பெரும் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளது என்பது உண்மையான விடயம். ஆனால் எதன் மூலம்? யார் மூலம்? இச் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றது என்பதே இங்குள்ள கேள்வி.
செய்திதாள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்தது போல் குறித்த கழிவுகள் மழையினால் அடித்து வரப்பட்டவை அல்ல எனவும், குறித்த வெள்ளவடிகால் செல்லுகின்ற பகுதி அப்பகுதியில் உள்ள சில குடிமனைகளின் பின்பகுதி. அப்பகுதியில் குடியிருக்கின்ற சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டு கழிவுகள் அனைத்தையும் தங்களுடைய குடிமனைக்கு பின்புறமாக உள்ள குறித்த வெள்ள வாடிகாலினுள் தான் கொட்டுகின்றார்கள் எனவும், அதற்கு சான்றாக அவர்கள் வடிகாலினுள் கொட்டும் கழிவுகள் சில அவர்கள் வீட்டு மதில்களிலும் தொங்கி கொண்டு இருக்கின்றன எனவும், அத்துடன் தங்களுடைய வீட்டு கழிவுநீரையும் குறித்த வெள்ள வாடிகாலினுள் தான் விடுகின்றார்கள் எனவும் (படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்) எனவே குறித்த பகுதியை சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாக்கிய முழுப்பொறுப்பும்; அப் பகுதியில் உள்ள சில குடியிருப்பாளர்களே ஆவர். வெள்ள வடிகால் என்பது வெள்ள நீர் மட்டும் செல்வதற்கான வடிகால் எனவும் மாநகரசபை உறுப்பினர் பிரதீபன் தெரிவித்து உள்ளார்.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பிரதான வெள்ள வடிகால்கள் துப்பரவு செய்யப்பட்டு தான் வருகின்றன எனவும், ஆனால் இங்கு ஒரு சிலர் தான் மிகவும் பொறுப்பற்றதனமாக தினமும் குப்பைகளை கொட்டுகின்றார்கள், பிளாஸ்ரிக் போத்தல்களை கொடுகின்றார்கள். ஒரு பிரதேசத்தின் சுகாதாரம் என்பது அப்பிரதேச மக்களின் செயற்பாடுகளில் தான் தங்கியுள்ளது எனவும் மாநகரசபை உறுப்பினர் பிரதீபன் மேலும் தெரிவித்தார்.
குறித்த விடயத்தில் மாநகர சபை பொறுப்பற்றதனமாக இருக்காது. பொது இடங்களிலும் இவ்வாறன வடிகாலினுள்ளும் கழிவுகளை வீசுவது என்பது மாநகர கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் ஒரு குற்றம். ஆக முதல்வர் மணிவண்ணனின் அறிவுறுத்தலின்படி குறித்த வடிகாலினை தங்களுடைய குடியிருப்பின் எல்லையாக கொண்ட அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் நாளை எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும். மீண்டும் அவ்ர்கள் அவ்வாறான குற்றம் இழைத்தால் மாநகர கட்டளைச் சட்டத்தினை பிரகாரம் தண்டம் அறிவிடப்படும். அத்துடன் யாழ். மாநகரத்திற்குட்பட்ட அனைத்து வெள்ளவடிகால்களும் துப்பரவு செய்யப்படும் எனவும் மேலும் தெரிவித்து உள்ளார்.
(புகைப்பட உதவி… -வரதராஜன் பார்த்திபன், யாழ்.மாநகர சபை உறுப்பினர்.)
கந்தர்மடத்தில் பாரிய சுகாதார சீர்கேடு! கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபையினர் ( படங்கள் இணைப்பு )