;
Athirady Tamil News

உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறுகள் (Disruptive Impulse Control Disorder)!! (மருத்துவம்)

0

குழந்தை மற்றும் டீன் ஏஜ் பருவத்தினரிடையே காணப்படும் ஒருவித உணர்ச்சி மற்றும் நடத்தைக் கோளாறுதான், ‘இணக்கமற்ற நடத்தை கோளாறு’ (Oppositional Defiant Disorder). இது, உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறுகளின் வகையைச் சார்ந்தது. ஒருவரின் உணர்ச்சி மற்றும் நடத்தையின் மீது அவர்களுக்கே சுயக்கட்டுப்பாடு இல்லாததே இவ்வகை கோளாறின் முக்கிய அம்சம்.

குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடும் இணக்கமற்ற நடத்தை கோளாறு, பாதிக்கப்பட்டவரின் குடும்ப, பள்ளி மற்றும் சமூக வாழ்க்கையை பெரும்பாலும் பாதிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு மிகப் பெரிய சவாலாகவும் மன உளைச்சலை
ஏற்படுத்துவதாகவும் அமைகிறது.

இணக்கமற்ற நடத்தை கோளாறு (Oppositional Defiant Disorder)

குழந்தைகளும் டீன் ஏஜ் பருவத்தினரும் அவ்வப்போது அதிகாரத்தில் இருக்கும் நபர்களான பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியவர்களை எதிர்ப்பது சகஜமே. சொல்பேச்சு கேளாமல், பெரியவர்களுக்கு கீழ்ப்படியாமல் வாதிடுவது, எதிர்த்து பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் பார்த்திருப்போம்.

இதேபோல 6 மாதத்துக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டாலோ, வயதொத்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக இவ்வகை நடத்தை காணப்பட்டாலோ, இவ்வகை நடத்தையினால் எப்போது ஒருவரின் குடும்ப, சமூக மற்றும் பள்ளி வாழ்க்கை பாதிக்கப்படுகிறதோ, அப்போது அது இணக்கமற்ற நடத்தை கோளாறாக இருக்கலாம். இவ்வகை கோளாறு, 10 வயது ஆகும் முன்னர் (குறிப்பாக 8 வயதில்) பொதுவாகக் கண்டறியப்படுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் அதிகம் காணப்படும் இப்பிரச்னை
16 வயதுக்கு மேல் கண்டறியப்படுவது அரிது. இது, ஆண் குழந்தைகளையேஅதிகம் தாக்குகிறது.

இணக்கமற்ற கோளாறின் அறிகுறிகள்

1. தொடர்ந்து கோபப்படுவது
2. பெரியவர்களிடம் அதிகமாக வாதிடுவது
3. பெரியவர்களின் பேச்சை கேட்க மறுப்பது/அவர்களுக்கு அடிபணியாமல் நடப்பது
4. மற்றவர்களை வேண்டுமென்றே வெறுப்பேற்றுவது போல நடந்து கொள்வது
5. தங்களின் தவறுக்கு பிறரை பழிக்கூறுவது
6. எளிதில் எரிச்சல் அடைவது
7. நிதானத்தை இழந்து கத்துவது /பிறரை வெறுப்பது
8. பிறரை பழிவாங்க யத்தனிப்பது
9. கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பது / திட்டுவது

இவற்றோடு, இவ்வகைப் பிரச்னை உள்ள குழந்தைகள் மந்தமாகவும், எளிதில் விரக்தியடைவுடன், தாழ்வுமனப்பான்மையும் கொண்டிருப்பர்.

எப்படி கண்டுபிடிப்பது?

பொதுவாக குழந்தைக்கு 2 வயது ஆகும்போது, குழந்தைகள் மேலே காணப்பட்ட அறிகுறிகளுடன் நடந்து கொள்வது சகஜம். அதை இணக்கமற்ற கோளாறு என பெற்றோர் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் 2 வயதில் குழந்தைகள் தங்கள் தனித்துவத்தையும் திறமையையும் வெளிக்காட்டுவதற்காக பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறி போராடுவது என்பது, ஆரோக்கியமான வளர்ச்சியின் அறிகுறிகள்தான். எனவே, அந்தந்த வயதுக்குரிய வளர்ச்சியை மனதில் வைத்து கொண்டு, தங்கள் குழந்தையின் செயல்பாட்டை பெற்றோர் புரிந்து கொள்வது அவசியம்.

இணக்கமற்ற கோளாறு என்பதை ஊர்ஜிதப்படுத்துவதற்கு முன்னர், மருத்துவர் சில பரிசோதனைகள் செய்து, இவ்வகை செயல்பாட்டுக்கு ஏதேனும் உடல்ரீதியான காரணங்கள் உண்டா என்பதை முதலில் தெரிந்துகொள்வார். அதற்குப் பின்னர், பெற்றோரின் மற்றும் ஆசிரியர்களின் கருத்து மற்றும் குழந்தை நடந்து கொள்ளும் விதம் போன்றவற்றை வைத்தே அது ‘இணக்கமற்ற கோளாறு’என்பதை உளவியல் நிபுணர் நிர்ணயிப்பார். பொதுவாக, இவ்வகை கோளாறு உள்ள குழந்தைக்கு, கற்றல் குறைபாடு, மனச்சோர்வு, போதைப்பழக்கம் மற்றும் மனப்பதற்றக் கோளாறுகளும் சேர்ந்து காணப்படலாம்.

காரணி இணக்கமற்ற கோளாறு ஏற்படுவதற்கான சரியான காரணம் சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் சேர்ந்து இவ்வகை கோளாறை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது. இவ்வகை பாதிப்புள்ள குழந்தையின் நெருங்கிய குடும்ப நபர்களுக்கு இணக்கமற்ற கோளாறு, நடத்தை கோளாறு, ஏ.டி.எச்.டி (ADHD), சமூக விரோத ஆளுமை கோளாறு (Anti-social personality disorder) மற்றும் மனநிலை கோளாறு (mood disorder) போன்ற மனநலப் பிரச்னைகள் ஏதேனும்இருந்திருக்க கூடும்.

பெற்றோருக்கு இடையிலான கடும் சண்டை, முறையற்ற/சீரற்ற வளர்ப்பு முறை, கடுமையான அணுகுமுறை, பிள்ளைகளின் தேவைகளை புறக்கணிக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் மேல் ஈடுபாடு காட்டாத பெற்றோரின் போக்கு, தாயின் மனநலக்குறைவு போன்ற குடும்பச்சூழல் காரணிகள் பெரும்பாலும் இவ்வகைப் பிரச்னையை ஏற்படுத்துவதோடு, அது நீடிக்கவும் வழிவகுக்கிறது.

சிகிச்சை

ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும். குழந்தையின் வயது, அறிகுறிகளின் தீவிரம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்து பயன்பெறும் நோக்கம் / திறன் முதலியவற்றை பொறுத்து இவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படும். சைக்கோதெரபி / ஆலோ சனையில், குழந்தைகளுக்கு பிரச்னையை சமாளிக்கும் திறன்கள் மற்றும் கோபத்தை ஆரோக்கியமாக வெளிக்காட்டும் மற்றும் சமாளிக்கும் திறன்கள் கற்றுக் கொடுக்கப்படும். மேலும், பெற்றோருக்கு குடும்ப ஆலோசனை மூலம், தங்கள் பிள்ளைகளின் நடத்தையை நல்லவிதமாக மாற்றும் உத்திகளும் ஆரோக்கியமான முறையில் தங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இவ்வகை கோளாறுக்கு மருந்துகள் தேவையில்லை. இணக்கமற்ற கோளாறை தடுக்க முடியாவிட்டாலும், அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால், அக்குழந்தையையும், அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றி விடலாம். குடும்பத்தில் ஆரோக்கியமான அணுகுமுறையும், அன்பு, ஆதரவு மற்றும் ஒழுக்கமான சீரான வளர்ப்பு முறையும் கடைப்பிடிக்கப்பட்டால், அறிகுறிகள் குறைந்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.

பெற்றோர் என்ன செய்யலாம்?

முதலில் உங்கள் மன உளைச்சலை குறைக்க வழி தேடிக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் பிள்ளை உங்களைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறது. (எ-டு. கோபப்படும் தருணத்தில், நீங்கள் அதை எப்படி வெளிக்காட்டுகிறீர்கள்?).

உங்கள் பிள்ளை வேண்டுமென்றே செய்கிறது என நினைக்காதீர்கள். ஏனெனில், மற்ற குழந்தைகள் போல, இவர்களுக்கு, வளைந்து கொடுக்கும் தன்மையும் விரக்தியை சமாளிக்கும் பக்குவமும் கிடையாது.

இறுக்கமான சூழ்நிலையில் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால், குழந்தையும் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் கலையைக் கற்றுக் கொள்ளும்.

உங்கள் பொறுமையை சோதிக்கும் வண்ணம் எல்லா செயலும் உங்கள் பிள்ளை செய்து பார்க்கும். நீங்கள் அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.

சண்டை ஆரம்பிக்கும் போதே அதன் விளைவைப் பற்றி சிந்தித்து, அதை விட்டு விலகுங்கள். எல்லாவற்றுக்கும் கண்டிக்காமல் சில விஷயங்களுக்கு விட்டுப் பிடியுங்கள். உங்கள் பிள்ளையிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள்.

விளைவுகள்

இணக்கமற்ற கோளாறு பாதித்த குழந்தை, பள்ளியில் பலப் பிரச்னைகளை சந்திக்கக் கூடும். இவர்களின் எரிச்சலூட்டும் நடத்தையாலும், சமூகத்திறன் இல்லாததாலும் சக மாணவர்கள் இவர்களை வெறுத்து ஒதுக்கி விடும் நிலை ஏற்படும். இவர்களின் பள்ளிப் படிப்பும் நிச்சயம் பாதிப்படையும். மேலும், இவர்களை இப்படியே அவர்கள் போக்கில் விட்டுவிட்டால், கடுமையான நடத்தை கோளாறான ‘Conduct Disorder’ஏற்படு வதற்கான வாய்ப்பும் அதிகம். குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கிய நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான, அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

ராகுல் ஏன் ரெளத்திரமாக இருக்கிறான்?

ராகுலுக்கு வயது 8. நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். ராகுல் ஒவ்வொரு முறை அடம்பிடிக்கும் போதும், எதிர்த்து பேசும் போதும், அவன் அம்மா எல்லாக் குழந்தைகளும் இந்த வயதில் இப்படித்தான் நடந்து கொள்ளும் என அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீப காலமாக நடந்த சில சம்பவங்கள் அவரை யோசிக்க வைத்தன. சென்ற வாரம்… பலமுறை எச்சரித்தும், பாட்டு வகுப்புக்கு சைக்கிளில் செல்லும் போது மிக வேகமாக ஓட்டி, போலீஸாரால் கண்டிக்கப்பட்டுள்ளான்.

மற்றொரு முறை, தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது வேண்டுமென்றே அடுத்தவர் வீட்டு ஜன்னலை உடைத்து இருக்கிறான். பெரிய குற்றங்கள் இல்லை எனினும், இப்படி பிரச்னை செய்து, வீட்டில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளான். நர்சரி வகுப்பிலிருந்தே ராகுலை சமாளிப்பதற்கு தான் சிரமப்பட்டதை நினைவுகூர்ந்தார் அவன் அம்மா. சிறிது நேரம் கண்காணிக்காவிட்டாலும், ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்தி விடுவான் ராகுல்.

சென்ற மாதம் பள்ளி நிர்வாகம் ராகுலுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தது. இதைக் குறித்து விசாரிக்க பள்ளிக்கு சென்ற அவன் அம்மாவிற்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. வகுப்பாசிரியையை கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டியுள்ளான். பெரும்பாலான நேரங்களில், மற்ற குழந்தைகளிடம் வம்பு சண்டைக்கு செல்வது, அவர்களை அழவைப்பது/ சீண்டுவது போன்ற செயல்களால், பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளான் என்பதும் தெரிய வந்தது. அவன் அம்மா என்ன தண்டனை கொடுத்தாலும், கவலைப்பட்டதாக காட்டிக்கொள்ள மாட்டான். அவனை ஏதேனும் வேலை செய்ய சொன்னால், நிச்சயம் அதை செய்ய மறுப்பான்.

வகுப்பில் ஏதேனும் பிரச்னை செய்து மாட்டிக் கொண்டால், மற்றவர்கள்தான் முதலில் சண்டையை ஆரம்பித்தார்கள் என சொல்லிக் கொண்டே இருப்பது ராகுலின் பழக்கம். விசாரித்து பார்த்தால், உண்மையில் ராகுல்தான் முதலில் வேண்டுமென்றே மற்றக் குழந்தைகளை சீண்டியிருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. இணக்கமற்ற கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, ராகுலுக்கும் பெற்றோருக்கும் பயிற்சி கொடுத்த 6 மாத காலத்தில், அவன் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவன் அம்மாவின் மன உளைச்சலும் குறைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.