;
Athirady Tamil News

மார்கழி பனியிலும் வியர்க்கிறதா? (மருத்துவம்)

0

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனம் அது. மார்கழி பனி போல குளிரூட்டப்பட்ட அந்த அறையில் தன்னுடைய வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் சோனா. குளிரின் சூழலையும் தாண்டி திடீரென்று சோனாவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. உள்ளங்கையிலும் பாதங்களிலும் வழக்கத்துக்கு மாறான ஈரம். துரத்தும் டெட்லைன் நிலவரங்கள் பற்றி ஆபீஸ் மீட்டிங்கில் விளக்கம் சொல்லியாக வேண்டும் என்பதை நினைத்த போது, இன்னும் அதிகமாக வியர்த்தது. இது வேலை தரும் அழுத்தம் என்று ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் குடித்துவிட்டு ரிலாக்ஸாக்கி கொண்டாள். ஆனால், அந்த வாரத்தின் இறுதிக்குள்ளாகவே மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவு அதீத நெஞ்சு வலி தாக்கியது. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ‘இது கார்டியாக் அரித்மியா… இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா நிலைமை மோசமாகியிருக்கும்’ என்றார்கள்.

சோனாவுக்கு வந்த கார்டியாக் அரித்மியா அத்தனை அபாயகரமானதா? இதய நோய் சிகிச்சை மருத்துவர் ஜாய் தாமஸிடம் கேட்டோம்…

‘‘இதயத்தின் ‘லப் டப்’ நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் துடிக்கிறது. இந்தத் துடிப்பின் எண்ணிக்கை பாலினம், மனநிலை, வயதைப் பொறுத்து சிறிது மாறலாம். கொஞ்சம் உற்று கவனித்தால் இந்தத் துடிப்பில் இசை போல ஒரு ரிதம் தெரியும். ஆனால், இந்த துடிப்பின் அளவு அதிகமானாலோ, குறைந்தாலோ இதயம் தன்னுடைய ரிதத்தை இழந்துவிடும். இதையே கார்டியாக் அரித்மியா (Cardiac arrhythmia) என்கிறோம். அதாவது, சீரற்ற இதயத் துடிப்பு நோய்.

சரி… கொஞ்சம் அதிகமாகவோ, குறைவாகவோ துடிப்பதால் என்ன ஆகி விடப் போகிறது என்று நினைக்கலாம். இதயம்தான் உடலுக்கு பவர் சென்டர். இந்த இதயத் துடிப்பு இயல்பாக இருப்பதால்தான் உடலுக்குத் தேவையான சத்துகளும் ஆக்சிஜனும் ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்கிறது. இந்தத் துடிப்பு இயல்பாக இல்லாவிட்டால் உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கும். ரத்த ஓட்டம் மூளைக்குச் செல்வது தடை படுவதால் பக்கவாதம், நுரையீரலுக்கு ரத்தம் சரியாக செல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல், ரத்த ஓட்டம் தடைபடுவதால் மாரடைப்பு என உயிருக்கு ஆபத்தான நிலை எதுவேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால், கார்டியாக் அரித்மியாவை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றவரிடம், குளிரிலும் வியர்ப்பதுதான் இதன் அறிகுறியா என்றோம்.

‘‘சோனாவுக்கு ஏற்பட்டதுபோல் குளிரான சூழலில் வியர்ப்பது முக்கியமான அறிகுறி… இதுதவிர சுவாசத்தின் அளவும் நேரமும் குறைவது, தலைசுற்றல், படபடப்பு, குமட்டல், தூக்கமின்மை, நீண்டநாள் சோர்வு, ஞாபக மறதி என பல அசாதாரணமான மாற்றங்கள் உடலில் நடப்பதும் கார்டியாக் அரித்மியாவின் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்தப் பிரச்னையை ரத்தப்பரிசோதனையிலும், சிறுநீர் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியும். அடுத்தகட்டமாக எலெக்ட்ரோ பிசியாலஜி என்ற பரிசோதனையிலும் இதயத்துடிப்பைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதில் ஒரு பிரச்னை இருக்கிறது…’’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.

என்ன பிரச்னை?

‘‘நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் நோயாளியின் இதயத்துடிப்பு எந்த அளவில் இருக்கிறது என்று மருத்துவருக்குத் தெரிய வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால், இந்த அதீத துடிப்போ, குறைவான துடிப்போ நாள் முழுவதும் இருக்காது. பரிசோதனைக்குச் சென்று உட்கார்ந்திருக்கும்போது மிகவும் நல்ல பிள்ளையாகத் துடிக்கும். இதனால் மருத்துவர் குழப்பம் அடைவார். நோயாளியும் நொந்து கொள்வார். இந்தப் பிரச்னையைத் தீர்க்க எக்ஸ்டர்னல் லூப் ரெக்கார்டர் (External loop recorder) என்ற கருவி உதவுகிறது. பேண்ட் எய்ட் அளவு இருக்கும் இந்தக் கருவியை மார்புப் பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம்.

7 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை நாள் முழுவதும் உடலில் அணிந்திருக்க வேண்டும். பலநாள் திருடன் ஒருநாள் அகப் படுவான் என்பது மாதிரி என்றாவது ஒருநாள் தாறுமாறாக இதயம் துடிக்கும்போது அந்த சீரற்ற இதயத்துடிப்பு கருவியில் பதிவாகிவிடும். நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் முடிவெடுக்க இந்த சீரற்ற இதயத்துடிப்பின் பதிவு உதவி செய்யும். இந்த ரெக்கார்டரில் தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் குளிப்பது, தூங்குவது போன்ற தினசரி வாழ்க்கையில் எந்த பிரச்னையுமில்லை.

வெளியில் ஒட்டிக்கொள்ளும் லூப் ரெக்கார்டரை போலவே, இம்ப்ளான்ட்டபிள் லூப் ரெக்கார்டர்(Implantable loop recorder) என்றும் ஒன்று உண்டு. இதில், லூப் ரெக்கார்டரை மார்புப் பகுதியில், லேசாகக் கீறி உள்ளே வைத்து மூடிவிடுவார்கள். இதேபோல், ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு திறந்து பார்த்தால் ரெக்கார்டரில் இதயத் துடிப்புத் தெளிவாகப் பதிவாகி இருக்கும்’’ என்றவரிடம், ‘கார்டியாக் அரித்மியா பெண்களுக்குத்தான் வருமா?’ என்று கேட்டோம். ‘‘பெண்களின் இதய அமைப்பு ஆண்களின் இதயத்தைவிட சிறிது வித்தியாசமானது என்பதால் கார்டியாக் அரித்மியா வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பெண்களுக்குத்தான் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதேபோல், டென்ஷன் ஆவதால்தான் கார்டியாக் அரித்மியா வரும் என்றும் சொல்ல முடியாது. ஏற்கெனவே, இருக்கும் இதயக் கோளாறைத் தூண்டிவிடும் காரணியாகவே டென்ஷன் இருக்கிறது. மன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தைராய்டு அதிகமாக சுரப்பது, மது, புகை, வேறு சிகிச்சைகளுக்கான மருந்துகள் போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. ஆகவே, இந்த காரணங்களை முடிந்தவரை தவிர்த்தால் கார்டியாக் அரித் மியாவால் நம்மை நெருங்கவே முடியாது’’ என்கிறார் உறுதியாக!

You might also like

Leave A Reply

Your email address will not be published.