;
Athirady Tamil News

கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் பணி நீக்கம் செய்யப்படுவர்! யாழ் டி ஐ ஜி!!

0

கோப்பாய் சம்பவத்தோடு தொடர்பு பட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரினால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுபதிவு செய்யப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளேன் குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் உடனடியாக பணி நீக்கம் வழங்குமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன் எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை என யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.
கோப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவரை வானின் கடத்திச் சென்று பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒரு சிலரின் தேவைக்காக பணத்தைப் பெற்று பொலிஸார் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன், குற்றச்சாட்டு எழுந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதும் அமைதியையும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப பொலிஸார் தமது கடமையை செய்துவரும் நிலையில் இவ்வாறான சில பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான வகையில் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது” என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே கூறினார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த வியாழக்கிழமை “ஹயஸ்” ரக வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் ஒன்று இளைஞன் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்து கைத்துப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசிவிட்டு சென்றது. அந்தச் சம்பவத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளமை தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞனால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் இணைந்தே கோப்பாய் பொலிஸார் அட்டகாசம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.