பரமக்குடியில் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ஜவகர் வீதியை சேர்ந்தவர் பாலம்மாள். இவருக்கு வயது 100.
5 தலைமுறைகளை கண்ட மூதாட்டி பாலம்மாளுக்கு 2 மகன், 4 மகள்கள் உள்ளனர். மூதாட்டியின் கணவர் சங்கரன், 25 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தனது 2-வது மகன் கனக சபாபதி வீட்டில் வசித்து வருகிறார். மகன் வழி, மகள் வழி என பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுபேத்திகள், எள்ளுப்பேரன்கள் என 100 பேர் குடும்பத்தில் உள்ளனர்.
மூதாட்டி பாலம்மாளுக்கு நேற்று 100-வது பிறந்த நாள். இதையொட்டி அவரது மகன், மகள்கள், பேரன்கள், பேத்திகள் சென்னை, ராமேசுவரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பரமக்குடிக்கு பாட்டியின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வந்தனர்.
அனைவரையும் பிறந்தநாளில் கண்ட மூதாட்டி பாலம்மாள் மகிழ்ச்சியில் திளைத்தார். மகள்கள் கவிதைகள் பாடியும், பேரன், பேத்திகள் நடனம் ஆடியும் மூதாட்டியை உற்சாகப்படுத்தினர்.
பாலம்மாள் குடும்பத்தினரை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார். அனைவரும் முன்னிலையில் அவர் கேக் வெட்டி பிறந்தாளை கொண்டாடினார்.
பாலம்மாள் இந்தத் தள்ளாத வயதிலும் தமிழ் ஆண்டுகளை மனப்பாடமாக தெளிவாகக் கூறி அசத்தினார். 5 தலைமுறைகள் கண்டு 100 பேரன், பேத்திகள், கொள்ளுப் பேத்தி, எள்ளுப் பேரன்கள் வரை ஒன்றுகூடி பாட்டியின் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம் பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.