;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது..!!

0

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துக்கு அந்த நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் அங்கிருந்தபடியே மேலைநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அமெரிக்காவில் அல்-கொய்தா இயக்கத்தினர் விமானங்களை மோதவிட்டு மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் நியூயார்க் நகர இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது.

எனவே அல்-கொய்தா இயக்கத்தினரை வேட்டையாடுவதற்காக 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தன.

ஆட்சியில் இருந்து தலிபான்களை விரட்டியடித்த அவர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்களை கொண்டு புதிய ஆட்சியை உருவாக்கினார்கள். 20 ஆண்டுகாலமாக அந்த ஆட்சி நடந்து வந்தது.

மேலும் 3 லட்சம் பேர் கொண்ட ராணுவத்தையும் அமெரிக்கா உருவாக்கி கொடுத்தது. அமெரிக்க ராணுவ வீரர்கள் அங்கேயே தங்கியிருந்து ராணுவத்துக்கு தேவையான உதவிகளை செய்தார்கள். தலிபான்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களும் நடத்தினார்கள்.

ஆனாலும் அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் தலிபான்களின் படை பலம் அதிகரித்தது. அதிக சக்தி கொண்ட படையாக மாறியது. இனியும் தலிபான்களை எதிர்த்து போரிட விரும்பாத அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்தது.

இது சம்பந்தமாக டிரம்ப் ஆட்சி காலத்திலேயே தலிபான்களுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. படையை படிப்படியாக வாபஸ் பெறுவதாக அப்போது அமெரிக்கா உறுதி அளித்தது. அதன்படி அமெரிக்கா படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன.

ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபிறகு படை குறைப்பு வேகத்தை மேலும் அதிகரித்தார். அத்துடன் முற்றிலும் படைகளை வெளியேற்றிக்கொள்ள அவர் முடிவு செய்தார்.

இதன்படி அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆகஸ்டு 15-ந்தேதியுடன் முற்றிலும் படைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்தது.

இதனால் அமெரிக்க படைகள் ஒரு மாதத்துக்கு முன்பே படைகளை வாபஸ் பெற தொடங்கியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முழு பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்துடன் தலிபான்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தினார்கள்.

ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலிபான்களுடன் போரிட்டு மடிவதை விரும்பவில்லை. எனவே உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்தார்கள். அவர்கள் தலிபான்களை எதிர்த்து போரிடவில்லை.

இதன் காரணமாக ஒவ்வொரு பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இறுதியாக கடந்த 15-ந்தேதி தலைநகரம் காபூலை கைப்பற்றினார்கள். அதுவரை அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டே ஓடிவிட்டார். தலிபான்கள் எளிதாக ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர்.

அந்த நேரத்தில் அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது ஏராளமான வெளிநாட்டினரும் தலிபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓட விரும்பிய ஆப்கானிஸ்தான் மக்களும் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்களை அமெரிக்க ராணுவம் சரக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்து சென்றனர். இத்துடன் பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை அனுப்பி தங்களது நாட்டினரை அழைத்து வந்தனர்.

ஆனாலும் கூட வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரை நாங்கள் எந்த தாக்குதல்களையும் நடத்த மாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்தனர். அதன்படி அமெரிக்க ராணுவத்தினரையோ மற்ற நாட்டினரையோ தாக்கவில்லை.

ஆனாலும் தலிபான்களுக்கே கட்டுப்பட மறுக்கும் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் அமெரிக்க வீரர்கள் மீது கடந்த வியாழக்கிழமை திடீர் தாக்குதல்களை நடத்தினார்கள்.

அமெரிக்க வீரர்களும், விமானத்தில் செல்வதற்காக வந்த மக்களும் குவிந்திருந்த இடத்தில் 2 மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 180 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் மக்கள் ஆவர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தின் ஒரு பிரிவான ஐ.எஸ்-கே என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றது.

நேற்று அமெரிக்க படைகள் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக மனித வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று விமான நிலையம் நோக்கி வந்தது. அதை அமெரிக்கா டிரோன் மூலம் குண்டு வீசி தகர்த்தது. இதில் 7 பேர் பலியானார்கள்.

இதையடுத்து பயங்கரவாதிகள் 5 முறை ராக்கெட் குண்டுகளை வீசி விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தினார்கள். அந்த குண்டுகளை அமெரிக்கா தடுப்பு சாதனங்கள் மூலம் இடையிலேயே வழிமறித்து அழித்தனர். ஆனாலும் சில குண்டுகள் கட்டிடங்கள் மீது விழுந்து தீப்பிடித்தது.

இவ்வாறு தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதிலும் அமெரிக்க ராணுவம் ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருந்தது. அமெரிக்க ராணுவ விமானங்கள் வீரர்களை ஏற்றிக்கொண்டு பறந்தன.

இன்றுடன் முழு ராணுவத்தையும் வாபஸ் பெறுவதாக கூறி இருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்காவின் அனைத்து ராணுவ வீரர்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார்கள்.

கடைசியாக வீரர்களை ஏற்றி செல்வதற்காக 5 விமானங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அவற்றில் வீரர்கள் ஏறினார்கள். ராணுவ சாதனங்களும் ஏற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றாக வானில் பறந்து சென்றன. இதன் கடைசி விமானம் அதிகாலை 12.51 மணியளவில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

அந்த விமானம் சென்றதும் தலிபான்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிகளையும் குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். வானில் வண்ண ஒளிகளை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. தெருக்களில் ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

கடைசி அமெரிக்க வீரர் காபூல் விமான நிலையத்தில இருந்து வெளியேறிய காட்சி.

இதுபற்றி தலிபான் இயக்க செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறும் போது, “இன்று ஆப்கானிஸ்தான் மண் முழுமையாக சுதந்திரம் அடைந்து விட்டது. அமெரிக்காவின் கடைசி வீரரும் இங்கிருந்து புறப்பட்டு விட்டார்” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா முழுமையாக வாபஸ் பெற்று விட்டதை அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சிங் முறைப்படி அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும் போது, “ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து ஒரு வீரர் கூட இல்லாமல் அனைத்து அமெரிக்க வீரர்களும் வெளியேறி விட்டார்கள். அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா ஒட்டுமொத்தமாக வெளியேறி இருக்கிறது” என்றார்.

ஆப்கானிஸ்தான் மறுவாழ்வு அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சல்மே கலில்சத் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் இருந்து நாங்கள் நடத்திய 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்து இருக்கிறது. இதற்காக தங்களுடைய இன்னுயிரை கொடுத்த எங்களது வீரர்களின் தியாகத்தை போற்றுகிறோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த 20 ஆண்டுகால போரில் 2,461 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 ஆயிரம் பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவ தளபதி மெக்கன்சி கூறினார்.

இதற்கிடையே அமெரிக்கர்கள் சிலரை மீட்காமல் ஆப்கானிஸ்தானிலேயே விட்டு விட்டு வந்து விட்டதாக குடியரசு கட்சியை சேர்ந்த தேசிய கமிட்டி பிரதிநிதி மெக்டேனியல் குற்றம் சாட்டி இருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.