ஜெயங்கொண்டத்தில் தனியார் பார்சல் சர்வீஸ் லாரியில் தீ- 5 தொழிலாளர்கள் காயங்களுடன் தப்பினர்..!!

திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவில் ஜெயங்கொண்டம் வரும் அந்த லாரியில் இருந்து அதிகாலையில் லோடுமேன்கள் மூலம் சரக்குகள் இறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே பெருமாள் கோவில் அருகே பார்சல் சர்வீஸ் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் லோடுமேன்கள் உட்பட 5 பேர் அந்த லாரிக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் ஒரு பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அடுத்த வினாடி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், மருந்து, ஜவுளி, இருசக்கர வாகன உதிரிபாக பொருட்கள் எரிந்தது. மேலும் அந்த லாரியில் பட்டாசு கிப்ட் பாக்சுகளும் இருந்ததால் தீயானது வேமாக பரவி வெடித்து சிதறியது.
இந்த திடீர் தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. முன்னதாக லாரிக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த டிரைவர் உள்பட லோடுமேன்கள் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீக்காயம் அடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் தீக்காயம் அடைந்தவர்கள் அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த லோடுமேன்கள் இளங்கோவன் (வயது 19), விஜயக்குமார் (21), பகவதி (18), மணிகண்டன் (18) மற்றும் திருச்சியை சேர்ந்த பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர் சபரி (26) என்பது தெரியவந்தது.
விபத்தில் காயம் அடைந்தவர்களில் மணிகண்டன் தவிர மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட இந்த பார்சல் சர்வீஸ் லாரி தீவிபத்து ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் லாரிக்குள் படுத்திருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொசுவர்த்தி பற்ற வைத்து இருந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.