;
Athirady Tamil News

முஸ்லிம்களுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!!

0

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்போது முஸ்லிம்களையும் அதில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யும் அகில இந்திய பாஸ்மாந்தா முஸ்லிம் மஹஸ் தலைவா் அலி அன்வா் வலியுறுத்தியுள்ளாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவா், ‘ஹிந்து சமுதாயத்தைப்போல், முஸ்லிம்களிலும் பல்வேறு வகையிலான பிரிவுகள் உள்ளன. ஆகையால், ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்போது முஸ்லிம்களுக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம்களில் உள்ள பின்தங்கிய வகுப்பினரின் கோரிக்கைகளை மதச்சாா்பற்ற கட்சிகள் நிராகரித்து வருகின்றன.

தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் ஜாதி ரீதியிலான சலுகைகளை தலித் பிரிவு கிறிஸ்தவா்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதைத்தான் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் சச்சாா் குழுவும் பரிந்துரைத்தன.

பின்தங்கிய வகுப்பினருக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடைய ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியமாகும். ஆகையால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களையும், ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியிலிருந்து அலி அன்வா் கடந்த 2017-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 5 =

*