யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலன் அவர்களது 23 ஆவது நினைவுதினம்!! (படங்கள் வீடியோ)

யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலன் அவர்களது 23 ஆவது நினைவுதினம் இன்று யாழ் சித்தன்கேணியில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் சித்தன்கேணியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான தங்க முகுந்தன், எஸ்.அரவிந்தன் உட்பட குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆயிரத்து 998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ் மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவகுமாரன் கொல்லப்பட்டார்.
அவருடன் யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ் பொலிஸ் அத்தியடசகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையக பொலிஸ் அதிகாரி மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் மாநகரசபையின் முதல்வராக பணியாற்றியதுடன் பிரபல சட்டத்தரணியுமாக விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”