;
Athirady Tamil News

தற்கொலைகளுடன் தொடர்கின்ற மருத்துவ கல்வி !!

0

தற்கொலைகளுடன் தொடர்கின்ற மருத்துவ கல்வி

தற்கொலை என்பது தான் மன அழுத்தங்களுக்கான தீர்வு அல்ல. தற்கொலைகளை வெல்வதற்கான பல வழிகள் உள்ளன. மன அழுத்தங்களின் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 42 ஆவது அணி மாணவன் சின்ராசா தர்சிகன் தன்னுடைய முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் யாழ் மருத்துவபீடத்திற்கு கற்க சென்ற இரண்டு ஆண்டுகளில், இது நான் அறிந்த மூன்றாவது தற்கொலை.(நாம் பல்கலைக்கழகம் சென்ற முதல் நாளே, நான்காம் வருடம் வருடம் கற்ற மன்னாரை சேர்ந்த மாணவனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தனர்) இந்த தற்கொலை செய்திகள் வந்த அன்று, அனைவரும் இதைப்பற்றி கதைப்பார்கள்.அடுத்த இரு தினங்களிற்கு WhatsApp இலும் Facebook இலும் இதைபற்றிய கருத்துக்களை இடுவார்கள். தற்கொலை நடந்த அன்று மட்டும் இறந்த மாணவனின் Batch மட்டும் கற்றலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஏனைய அனைத்து Batch களும் அன்றே கற்றலில் ஈடுபடத்தொடங்கிவிடுவார்கள்.

இறந்த மாணவனின் Batch மட்டும் அடுத்த நாளில் இருந்து தமது கற்றலை ஆரம்பிப்பார்கள். ஒரு வாரத்திற்குள் இறந்த மாணவனின் புகைப்படம் Canteen இல் மலர்மாலையுடன் தொங்கும்.இவ்வளவும்தான், இவ்வளவுடன் அந்த தற்கொலை அனைவரின் மனதில் இருந்தும் மறைந்துவிடும்.இவை நான் நேரடியாக கண்ட உண்மை.இவற்றைப்பற்றி கதைத்து எந்த பயனும் இல்லை விடுவோம்.

மன அழுத்தம் (Stress) என்ற வார்த்தை முதன் முதலில் எனது அக்காவின் வாயில் இருந்தே அறிந்தேன். அப்போது அவர் மருத்துவபீட மாணவி, நான் உயர்தரம் கற்றுக்கொண்டு இருந்தேன்.அப்போது எனது மனதில் தோன்றும்,நானும் உயர்தரம் கஸ்டப்பட்டுத்தானே கற்கிறேன்,அதுகும் இரண்டாம்முறைவேறு, ஏன் எனக்கு மட்டும் Stress வரவில்லை என்று. மருத்துவபீடம் வந்தபின்புதான் தெரிந்தது, Stress எனும் வார்த்தையை தமக்குரிய சொல்லாக மாற்றிவிட்டார்கள். அந்த Stress உயர்வடைந்து அதற்குரிய தீர்வாக தற்கொலையை அவர்கள் கருதுகின்றனர்.

இந்த தற்கொலைகளிற்கு ஏற்கனவே நடைபெற்ற தற்கொலைகள் அவர்களிற்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இதில் எமது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் முதல் நிலையில் உள்ளது கவலைக்குரிய விடயமே. இந்த தற்கொலைகளை தடுக்க எவரும் முன்வரப்போவதில்லை.உன்னை நீ காப்பாற்றிக்கொள்வதே ஒரே வழி.

எம்மை நாம் காப்பற்றிக்கொள்ள நான் நினைப்பது இரண்டே வழிதான்.

1) சிறந்த நண்பர்களை சேகரித்து வையுங்கள்.

நண்பர்கள் என்ற உடன் நாம் நினைப்பது எம்முடன் மருத்துவபீடத்தில் இல் கற்கும் மாணவர்களை மட்டும்தான். இது முற்றிலும் தவறான எண்ணம். மருத்துவத்துறைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 75%க்கு மேற்பட்டவர்கள் கற்றலில் மிகுந்த சுயநலக் குணம் உடையவர்கள் என்பது முற்றிலும் உண்மையான ஒன்றே.

எனவே நாம் தேர்வு செய்யும் நண்பர்கள் சிறிய வயதில் இருந்து எம்முடன் கற்ற நல்ல நண்பனாகவோ இல்லாவிட்டால் வேறு ஏதாவது துறைகளில் கற்கும் நண்பனாகவே இருக்கலாம். அதற்காக நான் மருத்துவத் துறையில் இல் கற்பவர்களை நண்பர்களாக்க வேண்டாம் என்று கூறவில்லை (எனக்கும் சிறந்த நண்பர்கள் உள்ளனர்), ஆனால் நாம் இதற்குள்ளேயே தேடி சிறந்த நண்பர்களை பெறுவதில் பெரும்பாலும் தோற்று விடுகின்றோம்.

(நான் படிப்பு கடினமாகும் போது, என்னுடன் சிறுவயதில் இருந்து படித்த நண்பனுடன் பண்ணைப்பாலத்திற்கு சென்று வருவதையே வழக்கமாக வைத்துள்ளேன்)

2) உங்களிற்கு உதவக்கூடிய மனப்பாங்குள்ள சிரேஷ்டமாணவர்களுடன் உடன் தொடர்பை பேணுங்கள்.

நாம் அனைவரும் செய்யும் பெரிய தவறு எமது மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவர்களிடம் மட்டும் உதவி கேட்பது, தொடர்பை பேணுவது. நாம் பல்கலைக்கழகம் சென்ற சிறிது காலத்திலேயே எமக்கு பிடித்த, எமக்கு உதவக்கூடிய சிரேஷ்ட அண்ணா அல்லது அக்காவை நாங்கள் இனங்காணலாம். அவர்கள் வேறு மாவட்டமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அவர்களுடன் உங்களுடையை கல்வி சார்ந்த விடையங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

(நான் பிரதானமாக உதவி கேட்ப்பது வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சிரேஷ்ட மாணவர் ஒருவரிடமே)

இவை எனது அனுபவங்கள். பின்பற்றினால் நிச்சயம் இழப்புகளை குறைக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.