;
Athirady Tamil News

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் ‘சமூக அறிவியல் வெளி’ இதழ் வெளியீடு!!

0

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவினர்(பிரிவு டி) ‘சமூக அறிவியல் வெளி’ என்ற இதழை வெளியிட்டுள்ளனர். சமூக விஞ்ஞானத் துறைசார்ந்த அறிவை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பகிரும் நோக்கம் கருதி பேரிடர்கால இடர்களை வெல்லும் சமூக அறிவியல் அணுகுமுறைகள் என்ற தொனிப்பொருளில் இந்த இதழ் தமிழில் வெளிவந்திருகின்றது. கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனேகரன் கென்னடி அறக்கட்டளை இதழ் வெளியீட்டுக்கு அனுசரணை வழங்கியுள்ளது. இதில் சமூக அறிவியல் சார்ந்த 06 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

‘கீழைத்தேச ஏகாதிபத்தியத்தின் எழுச்சியும் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும்’ (பேராசிரியர் ஏ.ரி கணேசலிங்கம்), ‘ஞாபகம் மற்றும் மறதி’ (தி.திலீபன்), ‘இயற்கை நோக்கிய பயணம’(கலாநிதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்), ‘கோவிட் 19 காலத்தில் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்’ (தேவரஞ்சினி சிவாஸ்கரன்), ‘ஆங்கில மொழிக் கற்ப்பித்தலில் அரங்க செயற்பணிகளின் பயன்பாடு’ (கலாநிதி கந்தையா சிறிகணேசன்) , ‘பேரிடர்கால சமூக அரசியல் யதார்த்தங்களை வெளிப்படுத்தும் அரங்கு’ (தேவநாயகம் தேவானந்த்) ஆகிய தலைப்புக்களில் இந்த இதழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

கோவிட் 19 பெரும் தொற்று மிகமோசமாகி பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ள சுழலில் இந்த இதழ் வெளியீடு மிக எளிய முறையில் யாழ்ப்பாணப்பல்கலை வெளியில் 14.09.2021 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி.சற்குணராஜா இதழை வெளியிட்டு வைத்தார். இதழின் முதல்பிரதியை இதழின் பிரதம ஆசிரியர் தேவநாயகம் தேவானந்த் மற்றும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி தலைவி தேவரஞ்சினி சிவாஸ்கரன் ஆகியோர் துணைவேந்தருக்கு வழங்கியிருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இந்த இதழ் ஆய்வு மற்றும் பட்டறிவுக்கான அறிவுப்பகிர்வுக் களமான இருக்கும். இதில் யாரொருவரும் கட்டுரைகளை எழுத முடியும். இந்த இதழுக்கு கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர், மாணவர்கள் என்ற பலதரப்பினரும் கட்டுரைகளை எழுத முடியும் என இதழாசிரியர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வெளிவரும் இரண்டாவது இதழுக்கு கட்டுரைகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + eighteen =

*